புத்ராஜெயா, மே 10- சுங்கை பெசார் (சிலாங்கூர்) மற்றும் கோலக் கங்சார் (பேரா) ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் களை நடத்துவது தொடர்பாக வெள்ளிக் கிழமையன்று தேர்தல் ஆணையம் கூடி விவாதிக்க உள்ளது.

இவ்விரு தொகுதிகளும் காலியாக உள்ளன என நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிக்கார் அமின் மூலியா, தேர்தல் ஆணையத்திடம் அறிவித்திருக் கிறார் என்று ஆணையத்தின் அறிக்கை ஒன்று கூறியது.

அண்மையில் சரவாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சுங்கை பெசார் தொகுதி எம்.பி.யும் துணையமைச்சருமான டத்தோ நோரியா மற்றும் கோலக் கங்சார் எம்.பி.யான வான் முகமட் கைரிலும் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தத் தொகுதிகள் காலியாகியுள்ளன.

புத்ரா ஜெயாவில் வெள்ளியன்று நடக்கவிருக்கும் தேர்தல் ஆணையத்தின் கூட்டத்திற்கு அதன் தலைவர் முகமட் ஹாசிம் அப்துல்லா தலைமை ஏற்பார். குறிப்பிட்ட அவ்விரு தொகுதிகளுக்குமான வேட்பு மனுத்தாக்கல் மற்றும் வாக்களிப்பு நாள் குறித்து விவாதிக்கப்படும் என அந்த அறிக்கை தெரிவித்தது.

கடந்த பொதுத் தேர்தலின்போது இவ்விரு தொகுதிகளிலும் பாஸ் கட்சி வேட்பாளர்கள் தேசிய முன்னணியிடம் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விகண்டனர். சுங்கை பெசாரில் 399 வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோ நோரியாவும் கோலக் கங்சாரில் 1,082 வாக்குகள் வித்தியாசத்தில் வான் முகமட் கைரிலும் வென்றனர்.

 

 

கோலாலும்பூர், மே 10- சமுகநல உதவி ஈட்டும் சில முதிய பெற்றோர்களின்  பிள்ளைகள் அவர்களை சரியாக பராமரிப்பதில்லை என்று மகளிர் மற்றும் சமுக மேம்பாட்டு துறையமைச்சர் டத்தின் படுக்கா சியு மெய் பான் கூறினார்.

இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகள், தங்களின் பெற்றோர்களை சரியாகக் கவனித்துக் கொள்வதில்லை என அவர் சொன்னார். பெற்றோர்களைப் பராமரிப்பதில் பிள்ளைகளுக்கு அதிகமான பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அவர்களில் பலருக்கு, நிதி உதவி வழங்கப்பட்டிருந்தாலும், சிலர் வறுமையின் கோட்டின் கீழ் இல்லாத காரணத்தினால் அவர்களின் நிதி விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.

இவர்களில் பலர் தங்களின் சிகிச்சைக் கட்டணங்களை கட்ட இயலாதவர்களாக இருக்கின்றனர். சில நேரத்தில் அவசரச் சிகிச்சைக்கான கருவிகள், மருந்துகள் அல்லது சக்கர நாற்காலிகளை பெறுவதற்குக் கூட இன்னும் சிலர் வழி இல்லாமல் இருக்கின்றனர், என்று யுகேம் மருத்துவத்துறையின் மருத்துவர் கூறினார். 

 

     

 

கோலாலம்பூர், மே 10- இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். ஆனால், நாட்டில் 4 லட்சம் இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

கூடிய விரைவில், நாட்டில் 14ஆவது பொதுத் தேர்தல் நடக்கவிருப்பதை முன்னிட்டு நடத்தப்பட்ட முன் ஏற்பாட்டு கூட்டத்தில் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் ச. சிவராஜா இவ்வாறு தெரிவித்தார்.

“இத்தேர்தலுக்கு ஆயத்தமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவ்வகையான முன்னேற்பாடுகளால், இறுதி கட்டத்தில் எந்த ஒரு சிக்கல்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்காது” என்று அவர் விளக்கினார். 

மஇகா இளைஞர் பிரிவினர் மாவட்ட ரீதியில் உள்ள மக்களை சந்திப்பதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்க முயற்சி செய்து வருகிறோம். குறிப்பாக, வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருக்கும் இளைஞர்களைச் சென்றடைவதே  எங்களின் முதல் நோக்கமாகும். எப்படியாவது அவர்களை வாக்காளர்களாக பதிவு செய்யவதற்கான நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ளவிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

1000 தொழில் முனைவர்களை உருவாக்கும் முயற்சியின் தொடக்கமாக, மஇகா இளைஞர் பிரிவு இதுவரை, 30 லட்சம் ரிங்கிட் வர்த்தக கடன் பெற இளைஞர்களுக்கு உதவியுள்ளது. இது பலர், தங்களின் வர்த்தகத்தை வலுப்படுத்திக்கொள்ள இது பலருக்கு பெரிதும் உதவியுள்ளது என்று அவர் அக்கூட்டத்தில் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா,  மே 10-  கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில்  இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலமானதால் சம்பந்தப்பட்ட   தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து,  காலியான சுங்கை பெசார் மற்றும்  கோல கங்சார் நாடாளுமன்றத் தொகுதிகளில்   தேசிய முன்னணிக்கும் பாஸ் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

  கடந்த வியாழனன்று, சரவாக்கில் பேட்டோங்கிலிருந்து கூச்சிங் சென்ற ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானதில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினரும் தோட்டத்தொழில் மற்றும் மூலப்பொருள் துணையமைச்சருமான  டத்தோ நோரியா காஸ்னோன் மற்றும் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினருமான  வான் முகமது கைரில் அனுவார் வான் அஹ்மாட் உட்பட 6 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பெட்டாலிங் ஜெயா, மே 10-  பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்   உயர் ரத்த அழுத்தம் காரணமாக  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக, அவரது வழக்கறிஞர்   ஆர்.சிவராசா  தெரிவித்தார். 

 தம் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை பெற்று சுங்கை பூலோ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது உடல் நிலை  மோசமடைந்து வருவதாலும், சிறையில் அவருக்குப் போதுமான மருத்துவ உதவி கிடைக்காததாலும் வீட்டுக்காவலில் தம்மை வைக்குமாறு  தமது வழக்கறிஞர் மூலம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள் விரைவில்... 

கோலாலம்பூர்,  மே 9-  கோலாலம்பூர் மருத்துவமனையின் ஐ.சி.யு-வில்  சிகிச்சை பெற்று வரும் ம.இ.கா-வின் முன்னாள் தகவல் பிரிவு தலைவர் சிவசுப்ரமணியத்தைப் படம் பிடித்து பத்திரிகையில் வெளியிட்ட ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் மீது சுகாதார அமைச்சரான  டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏ.கே  ராமலிங்கம் கேள்வியெழுப்பினார். 

மருத்துவமனையின் அடிப்படை ஒழுங்கு விதிமுறையையே மீறியிருக்கும் டி.மோகன் மீது சுகாதார அமைச்சரான டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதற்குக் காரணம் என்ன? என்று  இங்கு நடந்த  செய்தியாளர்கள்  கூட்டத்தில் அவர் கேள்வியெழுப்பினார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிவசுப்ரமணியத்தை மருத்துவமனைக்கே சென்று நேரடியாக டி.மோகன் மிரட்டியுள்ளார். 

தமக்கு எதிராக பத்திரிகை அறிக்கை வெளியிட்டதற்காக டி.மோகன் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிவசுப்ரமணியத்தின் அனுமதியின்றி அவரைப் படம் பிடித்து பத்திரிகைகளில் வெளியிடவும் செய்துள்ளார்.    

இதனை ஏன்  டத்தோ ஶ்ரீ சுப்ரமணியம் கண்டிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அவர் நடவடிக்கை எடுக்காமல்  இருப்பது ஏன்?  டி.மோகனை  மருத்துவமனைக்கு அனுப்பியதில் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ராவுக்குத் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது என்று ஏ.கே ராமலிங்கம்  கேள்வி எழுப்பினார். 

கோலாலம்பூர், மே 9- லெம்பா பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நூருள் இஸா அன்வார் தொடுத்துள்ள அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி, ஐஜிபி டான்ஶ்ரீ காலிட் அபு பக்காரும் அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் செய்து கொண்ட மனு மீதான விசாரணை ஜுன் 17ஆம் தேதி நடைபெறும்.

இரண்டு தரப்பினரையும் நீதிமன்ற சேம்பர்சில் சந்தித்த பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோன் லூய்ஸ் ஒஹாரா விசாரணைக்கான தேதியை நிர்ணயித்தார். 

அற்பமான- எரிச்சைலை ஏற்படுத்தக்கூடிய- நீதிமன்ற நடைமுறையை துஷ்ப் பிரயோகம் செய்யக்கூடியது என்ற அடிப்படையில் நூருள் இஸா தொடுத்துள்ள அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யும்படி காலிட்டும் இஸ்மாயில் சப்ரியும் தங்களது தனித் தனி மனுவில் கேட்டுக் கொண்டிருந் தனர்.

2013ஆம் ஆண்டில் சபாவுக்குள் தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குத் தலைமை ஏற்றதாகக் கூறப்படும் ஜமாலுலாயில் கிராம் என்பவரின் மகள் ஜேசெல் கிராமுடன் தாம் இருக்கும் புகைப்படம் ஒன்று பத்திரிகையில் இடம் பெற்றிருந்ததை வைத்து, காலிட்டும் இஸ்மாயில் சப்ரியும் அவதூறை ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை அறிக்கைகளை வெளியிட்டதோடு தம்மை தேசத் துரோகம் புரிந்தவர் போல குற்றஞ் சாட்டியிருப்பதாக நூருள் இஸா அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். 

மேலும், இஸ்மாயில் சப்ரியின் அறிக்கையானது, தாம் பயங்கரவாதத்தில் சம்பந்தப்பட்டவர் என்று சித்தரிப்பதாக இருந்தது என்று நூருள் இஸா சுட்டிக்காட்டியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் பிரபலமான அரசியல்வாதி என்ற முறையிலும் இவர்களது வார்த்தைகள் தமது தோற்றத்தைப் பாதித்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்காக தமக்கு நஷ்ட ஈடு தரப்படவேண்டும் என்றும் தமக்கு எதிராக இது போன்ற அவதூறு களை இவர்கள் செய்யாமல் தடுக்கவேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.

இந்த விவகாரத்தில், வாதி நூருள் இஸாவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமேயானால், அதற்கு அவரேதான் பொறுப்பு என்றும் ஜேசெல் கிராமைச் சந்தித்த அவரது செயல்பாடே அதற்குக் காரணம் என்றும் காலிட்டும் இஸ்மாயில் சப்ரியும் தங்களது தற்காப்பு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந் தனர்.  இந்த வழக்குக்கான விசாரணை ஜுன் 17இல் நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் தேதியை இன்று நிர்ணயித்தது.

 

 

 

 

 

More Articles ...