கோலாலம்பூர், ஏப்ரல் 21 – இம்முறை பொதுத் தேர்தலில், நாடாளுமன்ற வேட்பாளராக இரு பெண் வேட்பாளர்களை மஇகா களத்தில் இறக்கிவிட தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

மஇகா மகளிர் பிரிவுத் தேசியத் தலைவியான டத்தோ மோகனா முனியாண்டி, மஇகாவின் பாரம்பரியத் தொகுதியாகக் கருதப்படும் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பை பிரகாசமாக  பெற்றுள்ளார்.

அதே வேளையில் மற்றொரு பெண் வேட்பாளராக பேராவைச் சேர்ந்த டி. தங்கராணி போட்டியிடக் கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மஇகாவின் மற்றொரு பாரம்பரியத் தொகுதியான சுங்கை சிப்புட் தொகுதியில் தங்கராணி போட்டியிடுவார் என்ற ஆருடம் மிக வலுவாக உள்ளது. இவர் மஇகா மகளிர் பிரிவின் துணைத்தலைவியாக இருந்து வருகிறார்.

கடந்த காலத்தில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா தனது மகளிர் பிரிவு தலைவிகளான டாக்டர் லீலா ராமா, மற்றும் டத்தின் படுக்கா கோமளா கிருஷ்ணமோர்த்தி ஆகியோரை நிறுத்தி வெற்றி கண்டுள்ளது.

சிரம்பான், ஏப்ரல் 21 –பிரதமர் துறை துணையமைச்சரும் மஇகா தேசிய துணைத்தலைவரான டத்தோஶ்ரீ எஸ்.கே. தேவமணி, நெகிரி செம்பிலானிl உள்ள ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்பு தெலுக் கெமாங் என்று அழைக்கப்பட்ட போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா வேட்பாளருக்குப் பதிலாக, அம்னோவைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடக்கூடும் என்ற நிலையில் அதற்கு மாற்றாக, அம்னோவின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் ஒன்றான ஜெலுபுவில் தேவமணி போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டுத் தேர்தலில் சுங்கை சிப்புட் தொகுதியில் தேவமணி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெலுபுவில் போட்டியிடக்கூடும் என்ற ஆருடம் குறித்து, கருத்துரைத்த தேவமணி, "எதையும் நான் இப்போதைக்குச் சொல்ல முடியாது பொறுத்திருங்கள்" என்று குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலில் ஜெலுபுவில் போட்டியிட்டு வென்ற தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஜைனுடின் இஸ்மாயில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஏப்ரல்.20- 14-ஆவது பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் தொகுதிகளைச் சீரமைப்பதற்கு எதிராக 107 வாக்காளர்கள் தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அவ்வழக்கை தொடர்ந்த அந்த 107 வாக்காளர்களும், இந்தத் தொகுதி சீரமைப்பால் பாதிக்கப்படவில்லை என்றும், அதனால், அத்தொகுதிகளில் நிகழ்த்தப்படும் மாற்றங்கள் குறித்து வழக்கு தொடர அவர்களுக்கு உரிமை இல்லை என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி அஸீஸா ஒமார் கூறினார். 

“தேர்தல் ஆணையம்ம் வெளியிட்ட இரண்டாவது அறிக்கை வாயிலாக, அந்த 107 வாக்காளர்களும் தொகுதி சீரமைப்பால் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்தது” என்று அவர் சொன்னார். 

கடந்த மார்சு மாதம் 20-ஆம் தேதியன்று, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 107 வாக்காளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வாக்காளர்களை பெர்சே 2.0 அமைப்பின்  தலைவர் மரியா சின் அப்துல்லா வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கூட்டரசு அரசியலமைப்பின் படி, ஒரு தொகுதியில் சீரமைப்பு முயற்சிகளை எடுப்பதற்கு முன்னர், தேர்தல் ஆணையம், அத்தொகுதி மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அது குறித்து மக்களின் புகார்களை அவர்கள் செவி மடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், தேர்தல் ஆணையத்தின் தொகுதி சீரமைப்பிற்கு எதிராக வழக்கு தொடங்கப்பட்டது.

 தேர்தல் ஆணையத்தின் தொகுதி சீரமைப்பு குறித்த இறுதி அறிக்கையை எதிர்க்கும் வண்ணம் வாக்காளர்கள் வழக்கு தொடரும் சாத்தியத்தை தாங்கள் ஆராய்ந்து வருவதாக  வழக்கு நிராகரிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது வாக்காளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அம்பிகா ஶ்ரீனிவாசன் கூறினார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கோலாலம்பூர், ஏப்ரல்.20- இந்திய சமுதாயத்தில் குழப்பமான சூழலை உருவாக்கி அதில் குளிர்காய்ந்தவரும், வேதமூர்த்தி அன்றைய காலம் தொட்டு இன்றுவரை கனவுலகில் வாழ்ந்து வருகின்றாரே தவிர மாறாக மஇகா அல்ல என மஇகாவின் உதவித்தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் கூறினார்.

ஹிண்ட்ராப் போராட்டவாதி  உதயக்குமார், மனோகரன்  உட்பட சிறைவாசம் சென்ற பலர்  அதன் கொள்கையிலிருந்து விலகாது  இருக்கிறார்கள். ஆனால்  சுயநல அரசியலுக்காக வேதமூர்த்தி  கொள்கை இழந்து செயல்பட்டு வருகிறார். ஹிண்ட்ராப் இயக்கத்தினர்  அனைவரும்  போராடிக் கொண்டிருந்த  வேளையில் இலண்டனில்  ஒளிந்துக்கொண்ட  வேதமூர்த்தியை இனியும் இந்தியர்கள் நம்புவதாக இல்லை.

தான் காணும் பகல் கனவுகளை மக்களிடத்தில் சொல்லி அவர்களை குழப்பி ஏமாற்றும் வேலைகள் இனி எடுபடாது.அன்றைய காலத்தில் வேதமூர்த்தி  மகாதீரை பற்றி  படுமோசமாக விமர்சனம் செய்து விட்டு  இன்று கைகோர்த்திருப்பது ஏன்? தேசிய முன்னணி அரசாங்கத்தை எதிர்த்த நிலையில் எதன் அடிப்படையில் இவர்  துணையமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்தார்?  

பிறகு  அந்தப் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு என்னவானது? இந்தியர்களுக்கு பெற்றுத் தருவதாக கூறிய பணம் எங்கே?  இதற்கெல்லாம் வேதமூர்த்தியால் விளக்கம் அளிக்க முடியுமா? என அவர் வினவினார்.

வேதமூர்த்தியை பொறுத்தவரையில் அவரால் மக்களைச்   சந்திக்க முடியாது. வெற்று அறிக்கை மட்டுமே வெளியிட  முடியும். ஆகவே  இனியும் ஏமாற இந்தியர்கள் முட்டாள்கள் அல்லர் என அவர் குறிப்பிட்டார். மஇகாவைப் பொறுத்தவரையில்  இந்தியர்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி. அத்தகைய  நிலைப்பாட்டில்  தனது சேவைகளின் அடிப்படையில்  இந்தியர்களின் ஆதரவினை அதிகப்படுத்தியுள்ளது. 

மஇகாவின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம்  கட்சியையும், சமுதாயத்தையும் காக்கும் கடப்பாட்டோடு செயல்பட்டு வரும் வேளையில்  அவரின் கூற்றை விமர்சிக்க வேதமூர்த்தி போன்ற தகுதி இல்லை. ஆகவே வேதமூர்த்தி  வெற்று  அறிக்கை வெளியிட்டு இந்திய சமுதாயத்தை ஏமாற்றலாம் என கனவு காணக் கூடாது  என டத்தோ டி.மோகன் தமதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், ஏப்ரல்.20- 14-ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டால், பி.எஸ்.எம் கட்சிக்கு ஒரு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புதான் வழங்கப்படும் என்று பி.கே.ஆர் கட்சியின் ஆர்.சிவராசா கூறியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து, சிலாங்கூர், பினாங்கு, கிளந்தான், பேரா மற்றும் பகாங் மாநிலங்களிலுள்ள 4 நாடாளுமன்ற தொகுதியிலும், 12 சட்டமன்ற தொகுதிகளில் பி.எஸ்.எம் கட்சி போட்டியிடவிருப்பதாகவும், அத்தொகுதிகளில் எதிர்கட்சியான பக்காத்தான் கூட்டணி சார்பில் யாரும் போட்டியிட வேண்டாம் என்று பி.எஸ்.எம் கேட்டுக் கொண்டுள்ளது. 

பிரிபூமி, ஜ.செ.க மற்றும் அமானா கட்சிகளுடன் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை ஏற்படுத்தி இருப்பதால், பி.எஸ்.எம் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை தான் பக்காத்தானால் வழங்க முடிந்தது என்று சுபாங் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் சிவராசா கூறினார். 

இந்த நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பி.எஸ்.எம் கட்சி ஆர்வம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால், இந்தப் பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி மற்றும் பக்காத்தானுக்கு இடையில் தான் உண்மையான போட்டி நிலவுகிறது” என்று சிவராசா சொன்னார். 

“பி.எஸ்.எம் 16 தொகுதிகளை குறிவைத்துள்ளது. இந்தத் தொகுதிகளில் பக்காத்தான் மற்றும் தே.மு சார்பில் வேட்பாளர்கள் நியமிக்கப்படுவர். இதனால், வாக்குகள் மூன்று பகுதிகளாக பிரியும். இதனால் தே.முவிற்கு தான் நன்மை கிட்டும்” என்று அவர் கருத்துரைத்துள்ளார். 

கடந்த பொதுத் தேர்தலில், செமிஞ்சே மற்றும் கோத்தா டாமான்சாரா தொகுதிகளில் பி.எஸ்.எம் போட்டியிட்டு, வாக்குகள் பிரிக்கப் பட்டதால், அத்தொகுதிகளில் தே.மு வெற்றி பெற்றதை அவர் சுட்டிக் காட்டினார். 

இம்முறை சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மட்டுமே பி.எஸ்.எம் கட்சிக்கு பக்காத்தான் கூட்டணி வழங்கியது. அத்தொகுதியில் போட்டியிடும் பி.எஸ்.எம், பி.கே.ஆர் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்று பக்காத்தான் கூறியது. அந்த வாய்ப்பினை மறுத்து, பி.எஸ்.எம் 14-ஆவது பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளது.

கிள்ளான், ஏப்ரல் 20 – பொதுத் தேர்தல் என்று வந்து விட்டால் சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா நடு நிலையையே பேணுவார் என்று சிலாங்கூர் அரண்மனையின் அறிக்கை ஒன்று கூறியது. சிலாங்கூர் சுல்தானின் இந்தச் செய்தியை தாங்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

சிலாங்கூர் அரண்மனையும் நானும் எப்போதுமே நடுநிலை வகிப்போம் என்பதை இங்கு வலியுறுத்து விரும்புகிறேன். நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக இருக்க மாட்டோம் என்று சிலாங்கூர் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.

சுல்தான் என்ற முறையில் தமது பொறுப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்புச் சட்ட முறையிலான மன்னராட்சி முறைக்கு ஏற்ப, தங்களைப் பிரதிநிதிக்க, பொருத்தமான தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய மக்கள் சக்தி மீது எப்போதும் தமக்கு நம்பிக்கையும் மரியாதையும் உண்டு என்றார் அவர்.

தேர்தல் காலத்தின் போது எத்தகைய பிரச்னைகளையும் உருவாக்க வேண்டாம் என்று எல்லா பிரஜைகளையும் குறிப்பாக, சிலாங்கூர் பிரஜைகளை தாம் கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹரப்பான் ஆகிய இரு தரப்புகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் கேட்டுக் கொண்டிருப்பதாக பரவலாகி இருக்கும் சமூக ஊடக போலிச் செய்திக்கு அவர் மேற்கண்டவாறு விளக்கம் அளித்தார்.

கோலாலம்பூர், ஏப்ரல்.19- நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தலில் 65 விழுக்காட்டு இந்திய சமூகத்தினர் மஇகாவிற்கு ஆதரவளிப்பர் என்று மஇகாவின் தேசிய தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளது, வேடிக்கையாக உள்ளது என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறினார். 

நாடு தழுவிய நிலையில், 800,000 இந்தியர்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதன் வாயிலாக மஇகாவிற்கு ஆதரவளிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 65 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று நேற்று டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்திருந்தார். 

மஇகாவினர் கனவுலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அக்கட்சியால்  இந்தியர்களின் ஆதரவை மீண்டும் அக்கட்சிக்கு திருப்ப முடியாது என்று தேசிய முன்னணி கருதியது. அதனால் தான் கடந்த 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, ஹிண்ட்ராப் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை தே.மு ஏற்படுத்திக் கொண்டதாக வேதமூர்த்தி தெரிவித்தார். 

இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாட்டை கருத்தில் கொண்டு, ஹிண்ட்ராப் தே.முவுடன்  அந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. அதன் அடிப்படையில் தான் கடந்த பொதுத் தேர்தலில், இந்தியர்கள் பலர் தே.முவிற்கு வாக்களித்தனர் என்றும் வேதமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.  

அதன் பின்னர், பிரதமர் துறை அமைச்சின் துணை அமைச்சராக வேதமூர்த்தி நியமிக்கப்பட்டார். ஆனால், புரிந்துணர்வு ஒப்புதலுக்கு ஏற்ப தேசிய முன்னணி அரசாங்கம் செயல்படாததால், கடந்த 2014-ஆம் ஆண்டு தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். 

ஹிண்ட்ராப் இப்போது பக்காத்தானுடன் கூட்டணி அமைத்துள்ளது. 14-ஆவது பொதுத் தேர்தலில், இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும், 4 சட்டமன்ற தொகுதிகளிலும் ஹிண்ட்ராப் போட்டியிடவிருக்கிறது. 

“இந்திய சமூகம் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சிக்கல்களை அடையாளம் கண்டு, அதற்கான தீர்வினை எடுக்க மஇகா தவறி விட்டது. மஇகாவினை தே.மு நம்பாமல், இந்தியச் சமூகத்தினருக்கான நிதியை செடிக் வாயிலாக அவர்களுக்கு வழங்கி வருகிறது” என்பதையும் வேதமூர்த்தி சுட்டிக் காட்டினார்.  

இந்திய சமூக மேம்பாட்டிற்கு மஇகா என்ன நன்மைகளை செய்துள்ளது என்பது தொடர்பில் டாக்டர் சுப்ரமணியம் தன்னுடன் விவாதத்தில் ஈடுபட தயாராக இருக்கின்றாரா? என்றும் வேதமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

More Articles ...