கோலாலம்பூர், மார்ச் 29 - பல்வேறு  இளைஞர் பயிற்சித் திட்டங்களுக்காக  "நாம்"  அறவாரியத்திற்குப் பிரதமர் துறை நிதி ஒதுக்கியது.  இந்த இளைஞர் பயிற்சித் திட்டங்களில் மிளகாய்ச் சாகுபடி ஒரு பகுதியே என்று இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் விளக்கமளித்தார். 

சுமார் 19 மில்லியன் ரிங்கிட் நிதியை டத்தோ சரவணன் துணையமைச்சராக இருக்கும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு வழங்கியிருப்பதானது  பதவியைப் பயன்படுத்தி லாபம் அடையும் செயல்  (Conflict of interest) என செர்டாங் தொகுதி எம்.பி-யான ஜ.செ.க-வைச் சேர்ந்த ஒங் கியன் மிங் சாடியிருந்தார். 

இது தொடர்பாக "வணக்கம் மலேசியா"  இணைய தினசரி துணையமைச்சர் டத்தோ எம்.சரவணனுடன் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது அந்த எம்.பி-யின் குற்றஞ்சாட்டுத் தவறானது. தவறான தகவலின் அடிப்படையிலானது என்று அவர் சுட்டிக்காட்டினார். 

"நாம்" அறவாரியத்திற்கு வழங்கப்பட்ட நிதி பிரதமர் துறையைச் சார்ந்தது. இளைஞர்களுக்கென பல தொழில்பயிற்சித் திட்டங்களை "நாம்" மேற்கொண்டு வருகிறது. விமானப் பராமரிப்பு, தொழில்பயிற்சி வாகன தொழில்நுட்ப பயிற்சி, இயந்திர தொழில்நுட்ப பயிற்சி, பெட்ரோல், எரிவாயு பயிற்சி ஆகியவை இவற்றில் அடங்கும். விவசாயமும் இதில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. 

குறிப்பாக, நவீன மிளகாய் சாகுபடி பயிற்சியும் இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிகளுக்கான நிதியைப் பிரதமர் துறை அமைச்சு வழங்கி வருகிறது என்று அவர் விவரித்தார். 

இதிலும்,  இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் பணி இளைஞர் பயிற்சித் திட்டம் வழி அமலாக்கம் சரிவர அமைந்திருக்கிறதா என்பதை கண்காணிப்பது மட்டுமே. எனவே, இதில் சுயலாபம் தேடும் செயல் எதுவும் இல்லை என்று டத்தோ சரவணன் சொன்னார். 

சொல்லப்போனால், ஓங் கியன் மிங் (செர்டாங் எம்.பி) முட்டாள்தனமான ஒரு எம்.பி. நாடாளுமன்றத்தில் என்னிடமே நேரடியாக இது பற்றிக் கேட்டிருக்கலாம். அந்த நிதி பற்றி நான் தெளிவாக விளக்கமளித்திருப்பேன். அதை  விடுத்து அரசியல் விளம்பரத்திற்காக அவர் அறிக்கை விடுத்திருக்கிறார் என்று டத்தோ சரவணன் சாடினார். 

பதவியைப் பயன்படுத்தி லாபமடைந்ததாக கூறுவதற்கு எதுவும் இல்லை . "நாம்" அறவாரியத்தின் தலைவராகத் தாம் செயல்படுவது எந்த தவறும் இல்லை என அவர் வலியுறுத்தினார். 

நவீன மிளகாய் சாகுபடி திட்டத்தின் கீழ் 1330 இந்திய வம்சாவளி இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் 129 பேர் சொந்தமாக விவசாயப் பண்ணைகளைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். மேலும், 500க்கும் அதிகமான இளைஞர்கள் மிளகாய் சாகுபடிக்கென நிலங்களைத் தயார் செய்து, சீரமைத்து வைத்துள்ளனர். முதலீடுகளைத் திரட்டுவதில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

 

 கோலாலம்பூர், மார்ச் 29- இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தலைமையிலான அறவாரியத்திற்கு மிளகாய் பயிரிடுவதற்காக 19 மில்லியனை அவர் சார்ந்த அமைச்சே வழங்கி இருப்பதானது சுயநலம் சார்ந்த செயல் என்ற கண்டனத்திற்குள்ளானது. இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு சம்பந்தப்பட்ட 107 மில்லியன் நிதி முறைகேடு தொடர்பாக எம்.சி.ஏ.சி எனப்படும் ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், மேற்கண்ட விவகாரம், வெளிப்பட்டுள்ளது. 

பத்துகாஜா தொகுதி நாடாளுமன்றத் உறுப்பினரான வி.சிவக்குமார், எழுப்பிய  கேள்விக்கு வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், அரசாங்கம்  "நாம்" எனப்படும்  இந்த அறவாரியத்திற்கு நிதி ஒதுக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

"யாயாசான் நாம்" எனப்படும் அந்த அறவாரியம், "டத்தோ சரவணன்  தலைமையிலான  பதிவு பெற்ற ஒரு நிறுவனமாகும். இதில் இதர ம.இ.கா  தலைவர்கள்  வாரிய இயக்குனர்களாக உள்ளனர் என்று மலேசியாவின் நிறுவன ஆணைய ஆவணங்கள் காட்டுகின்றன. 

 அரசியல் கட்சி ஒன்றுடன் முழுமையான  கட்டுப்பாட்டிற்குள்   இருக்கும்  அரசு சாரா  இயக்கம் (என்.ஜி.ஒ)  ஒன்றுக்கு அரசாங்கம் நிதி வழங்குவது என்பது  முற்றாக ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.  நெறிமுறைக்கு  மாறானது என்று  செர்டாங் தொகுகு எம்.பி-யான ஜ.செ.க-வை சேர்ந்த  ஓங் கியன் மிங் அறிக்கை ஒன்றில் கூறினார். 

ஜ.செ.க-வின் கட்டுப்பாட்டில், செயல்படக்கூடிய  ஒரு என்.ஜி.ஒ-வுக்கு அரசாங்க நிதியைப் பினாங்கு மாநில அரசாங்கம்  திசைதிருப்பி விட்டிருக்குமேயானால், இந்நேரம் எத்தகைய அமளிகள் நடந்திருக்கும் என்பதை கற்பனைச் செய்து பாருங்கள் என்றார் அவர். அப்படி நடந்திருந்தால்,  அந்த என்.ஜி.ஓ மீது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம்  உடனுக்குடன் விசாரணைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார் என்று "மலேசியா கினி செய்தி கூறுகிறது. 

இவ்விவகாரம் குறித்து, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் விளக்கம்   அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும், "யாயாசான் நாம்" அமைப்பு, அமைச்சின் கட்டுப்பாட்டிலோ அல்லது, அதன் கணக்கு தணிகிக்கையின் கீழோ இல்லை என்பதை செர்டாங் எம்.பி ஓங் கியன் மிங் தெளிவு படுத்தினார். 

 

கோலாலம்பூர், மார்ச் 29- முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அதிகமாகப் பேசப் பேச, அவருக்கு எதிராக வழக்கைப் பதிவு செய்ய போலீசார் அதிகமான ஆதாரங்களைத் திரட்டமுடியும் என்று உள்துறைத் துணையமைச்சர் நூர் ஜஸ்லான் எச்சரித்தார்.

ஞாயிறன்று நடந்த மக்கள் காங்கிரஸ் கூட்டத்தின் போது துன் மகாதீரின் பேச்சு தேச நிந்தனையான மற்றும் தேசத்துரோகத் தன்மையைக் கொண்ட தாக உள்ளது.  

குறிப்பாக, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு, வழக்கத்திற்கு முரணான வழிமுறைகளைக் கடைபிடிக்கத் தூண்டும் வகையில் கோரிக்கைகளை மகாதீர் விடுப்பதாக தெரிகிறது என்றார் நூர் ஜஸ்லான்.  

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அப்பால், வழக்கத்திற்கு மாறான வழிகளை கையாளும்படி மக்களை அவர் கோருகிறார். அரசியல் அமைப்புச் சட்டத் திட்டங்களை மதித்து நடக்கவேண்டும் எனவே, துன் மகாதீரின் கருத்துகள் தேச நிந்தனையானதாக, தேச துரோதமானதாகக் கருதப்பட முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 

மகாதீரைப் பொறுத்தவரையில், அவர் அதிகமாகப் பேசினால், அவர் அதிகமான தவறுகளைச் செய்வார். 'மலேசியாவைக் காப்பாற்றுவோம்' என்ற இயக்கத்தின் பேரில் அவர் நாடு தழுவிய அளவில் பிரசாரம் செய்ய மகாதீர் திட்டமிட்டிருப்பதானது, வெறும் விளம்பரத் தந்திரம் என்றே அரசாங்கம் கருதுகிறது என்று நூர் ஜஸ்லான் விவரித்தார்.

புத்ராஜெயா, மார்ச் 29- இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு மலேசியா வந்து சேர்ந்த மாலத் தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் காயூமிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கப்பட்டது. 

பிரடானா புத்ரா வளாகத்தில் அவருக்கு இந்த அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் யாமீன் தம்பதியரை, பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்-ரோஸ்மா தம்பதியர் வரவேற்றனர். 

பின்னர் மலேசிய அமைச்சர்களும் தூதர்களும் அதிபர் யாமீனுக்கு அறிமுகம் செய்து வைக்கபட்டனர்.

 

கோலாலம்பூர், 29 மார்ச்-  பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு  ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு "ஊமையாகவும், செவிடர்களாகவும், குருடர்களாகவும்" அம்னோ உறுப்பினர்கள் மாறி விட்டதால் தான், தாம்  எதிர்க்கட்சித் தலைவராக லிம் கிட் சியாங்குடன் இணைந்து பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக நாட்டின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது    தெரிவித்துள்ளார்.  

லிம் கிட் சியாங்கும் தாமும் அரசியல் எதிரிகள் என்ற போதும்,   ஒரே அரசியல் கொள்கை காரணமாக  இருவரையும் ஒன்றிணைத்துள்ளதாக  மகாதீர் தெரிவித்தார். 

தற்போது, பெரும்பாலான அம்னோ உறுப்பினர்கள் ஊமையாகவும், செவிடர்களாகவும்  குருடர்களாகவும் ஆகிவிட்டனர். நஜீப் என்ன குற்றம் செய்தார் எனத் தெரிந்தும் அவருக்கு ஆதரவாக உள்ளனர்.    "இனி இது அம்னோ அல்ல. அம்னோ முன்பு போல் இல்லை. நான்  லிம் கிட் சியாங்குடன் இணைந்ததை  அம்னோ உறுப்பினர் போல் நடித்து  போலி வேதனை காட்டாதீர்கள்" என்றார். 

இதனிடையே நேற்று முன் தினம் ஷா ஆலம் மாநாட்டு மையத்தில்  மக்கள் காங்கிரஸ் எனும்  நிகழ்வில்  துன் டாக்டர் மகாதீர், ஜ.செ.க தலைவர் லிம் கிட் சியாங், முன்னாள் துணைப்பிரதமர் டான் ஶ்ரீ முகிதின் யாசின், கெடா மாநில முன்னாள் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீர், பெர்சே தலைவர் அம்பிகா ஶ்ரீநிவாசன், உட்பட  தேசிய முன்னணி, எதிர்க்கட்சிகள், மற்றும் அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய துன் டாக்டர் மகாதீர்  "நான் பதவியிலிருந்து விலகும் போது,  அப்துல்லா அகமது படாவியைப் பிரதமராக்கினேன். ஏனெனில் அப்போது 2004 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவருக்கு அதிக செல்வாக்கு  இருந்தது. ஆனால் அந்த செல்வாக்கானது 2008-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது சரிந்ததையடுத்து அவரிடம் சில குறைகள் இருப்பதை உணர்ந்தேன். துன் அப்துல் ரசாக் நாட்டிற்கு ஆற்றிய சேவையைக் கருத்தில் கொண்டு, அவரது மகனான  நஜீப்பை பிரதமராக்க வேண்டும் என துடித்தேன். நான் செய்த தவறு தான் அது. அவர் தனது அப்பாவைப் போல் இல்லை. பிரதமரானப் பிறகு என்னிடம் அவர் ஆலோசனைக் கேட்டதே இல்லை. நானே கேட்டாலும், தவிர்த்து வந்தார். என்னிடம் பேசுவதைத் தவிர்த்தார்.  எந்தவொரு  பிரதமரிடமும் 2.6 பில்லியன் ரிங்கிட் பணம் வங்கிக் கணக்கில் இருந்தால் அது ஒரு குற்றம். அது எங்கிருந்து வந்ததாக இருந்தாலும் அது ஒரு மாபெரும் குற்றம்  என அந்நிகழ்வில் பேசிய மகாதீர் தெரிவித்தார். 

"நஜீப் நாட்டிற்குக் களங்கம் ஏற்படுத்தி விட்டார். அவரால் தான் இன்று உலகளவில் ஊழல் மிகுந்த 10 நாடுகளின் பட்டியலை மலேசியாவை இணைத்துள்ளது" என துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். 

கோலாலம்பூர், மார்ச், 28- பிரதமர் நஜீப்புக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர்க்கும் இடையேயான சச்சரவின் காரணமாக புரோட்டோன் தேசிய கார் நிறுவனம் ஆட்டங்காண தொடங்கியுள்ளது.

 

இதில் பணி புரியும் ஏராளமான ஊழியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். அதேபோன்று கார் விற்பனை உரிமம் பெற்றவர்களும் கடும் பாதிப்பை எதிர் கொள்கின்றனர்.

 

புரோட்டன் கார் நிறுவனத்தை உருவாக்கியவர் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஆவார். தற்போது அதன் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

 

நஜீப்புக்கும் மகாதீருக்கும் இடையே வெடித்திருக்கும் கருத்து வேறுபாடு, காரணமாக புரோட்டோன் நிறுவனம் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது.

 

அதன் கடன் சுமை பெருகி விற்பனை குன்றியுள்ள வேளையில், அந்நிறுவனம் தனக்கு ஏற்படுள்ள பிரச்சனையை தீர்க்க, அரசாங்கத்திடமிருந்து 1.47 பில்லியன் ரிங்கிட் நிதியுதவி கேட்டுள்ளது.

 

துன் மகாதீர்- நஜீப் சச்சரவினால் நிதியுதவி தடைபடலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. அரசு நிதியுதவி கிடைக்காத நிலையில், ஊழியர்கள் வேலை இழக்கலாம், அதற்குப் பொருள் விற்பனை செய்தவர்களுக்குப் பணம் கொடுக்க முடியாமல் போகலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

ஊழியர்களிடமும் பொருள் விற்பனையாளர்களிடமும், மகாதீரா அல்லது நஜீப்பா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டிருப்பதாக என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் தனது பெயரை தெரிவிக்க விரும்பவில்லை.

  

மகாதீரைப்  பலரும்  மதித்தாலும்  அவர் “இப்போது  அவர் ஒரு  தடங்கல்  என்ற  எண்ணம்  புரோட்டோனில் பெருகி  வருகிறது”  என்று  அந்த  உயர்  அதிகாரி ஒருவர் கூறினார்.

ஷா ஆலம், மார்ச் 28- ஷா ஆலமில் நடந்த 'மலேசியாவைக் காப்பாற்றுவோம்' என்ற கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதை வைத்து மஇகாவிலுள்ள இரண்டு அணிகளும் அரசியல் நடத்தவேண்டடாம் என்று  மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

நான் என் மனச்சாட்சிக்கு ஏற்ப, நாட்டின் நலனுக்கு எது நல்லது என்று நினைத்தேனோ, அதன்படியே நடந்து கொண்டேன். 

என்னுடைய இந்த நடவடிக்கைகளை டத்தோஶ்ரீ பழனிவேலின் தரப்பினருடன் தொடர்பு படுத்தி, அதன்வழி டாக்டர் சுப்ரமணியம் தரப்பு நாட்டின் எதிர் காலத்துடன் மீண்டும் ஓர் அரசியலை நடத்தியுள்ளது. அதேவேளையில், பழனியின் தரப்பினரும் என்னைச் சாடியிருக்கின்றனர்.

இரு தரப்புக்களுமே சச்சரவுகளை நிறுத்திக் கொண்டு நமது நாடு எதிர்நோக்கும் நெருக்கடி மற்றும் இந்திய சமுதாயத்தின் நலன்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தவேண்டும்.

மஇகாவின் அமைப்புச் சட்டத்தின் 91ஆவது பிரிவின்படி, நான் மஇகா உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுவதாக டத்தோஶ்ரீ தேவமணி உடனடியாக அறிவித்திருக்கிறார். இதே விதியின் படிதான் பழனி மஇகா உறுப்பினரே அல்ல என்று அறிவித்தார்கள்.

எப்படிப் பார்த்தாலும், நான் மஇகா உறுப்பினராக இல்லை. டாக்டர் சுப்ரமணியம் தரப்பு நடத்திய கட்சித் தேர்தலின் போது என்னுடைய கிளை சார்பில் எனது வேட்புமனுவை நான் தாக்கல் செய்யவே இல்லை. அதேசமயம், பழனி தரப்பு நடத்திய கட்சித் தேர்தலை சங்கங்கள் பதிவகம் அங்கீகரிக்கவில்லை.

எனவே, நாட்டை நேசிக்கிற ஒரு பிரஜையாக நான் இருந்துவிடவே விரும்புகிறேன். மேற்கண்டவாறு டத்தோ முருகேசன் தெரிவித்தார்.

More Articles ...