கோலாலம்பூர், மார்ச் 7-நல்லெண்ணத்தையும் சமூக ஒழுங்கையும் கட்டிக் காக்கும் படி மலேசியர்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் நினைவுறுத்தினார்.

இனவாதத்தை சில தரப்பினர் கிளப்புகின்றனர். சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி, பொய்களையும் தீவிரவாதக் கருத்துக்களையும் தேச நிந்தனைத் தன்மையுடைய அம்சங்களையும் பரப்புகின்றனர் என்று பேரரசர் சுட்டிக்காட்டினார்.

இன்று 13ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடரைத் தொடக்கி வைத்து அவர் உரையாற்றினார்.

இத்தகைய செயல்களை உடனடியாகக் கட்டுப்படுத்தப்படவேண்டும். சம்பந்தப்பட்ட அரசு துறைகள் இவற்றைச் சமாளிக்க உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பல இன மக்களைக் கொண்ட இந்த சமுதாயத்தில், உரிய நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபடாவிடில், சச்சரவுகளுக்கும் பெரும் மோதல்களுக்கும் வித்திட்டுவிடும் என்று பேரரசர் கூறினார்.

கோலாலம்பூர், மார்ச் 7- அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா, தாம் ஒருபோதும் மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை என்றும்  தமக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக இன்று நாடாளுமன்றத்தில் “அவரது பெயர் ஏன் மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திடுவோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது?” என செய்தியாளர்கள் கேட்டபோது, தமக்கு அது குறித்து எதுவும் தெரியாது என அவர்  தெரிவித்தார்.  

“நான் அங்கு போகவில்லை, நான் ஆதரிக்கவும் இல்லை, எனக்கு அது குறித்து எதுவும் தெரியவும் தெரியாது” என அவர் தெரிவித்தார். 

இதனிடையே நஜீப்புக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரம் ஒன்று முடுக்கிவிடப்பட்டுள்ளது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, துங்கு ரசாலி பிரதமர் நஜீப் நாட்டை நல்வழிப்படுத்துவதால் அவருக்குத் தாம் முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

 

 

 

ஷாஆலம், அக்.18- மலேசிய தேர்தல் ஆணையத்தின் உத்தேச தொகுதி எல்லைச் சீரமைப்புத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க சிலாங்கூர் மாநில அரசாங்கம் தயாராகி வருகிறது என மந்திரிபுசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

எல்லைச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13ஆவது ஷரத்தின் 2(ஏ), 2(பி), 2(சி), மற்றும் 2(டி) பிரிவுகளை தேர்தல் ஆணையம் மீறியிருப்பதாக சட்ட நிபுணர்கள் ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளச்து என செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

மாநில அரசின் சட்ட ஆலோசனைக் குழுவினால் நீதிமன்ற ஆய்வுக்கென இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. மாநிலத்தின் சட்ட நிபுணத்துவ ஆலோசனைக் குழுவில் மலேசிய மனித உரிமை சங்கத்தின் தலைவரான டத்தோ அம்பிகா ஶ்ரீனிவாசனும் இடம் பெற்றுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான முடிவு வரும்வரையில் தேர்தல் ஆணையம் தற்போது நடத்திவரும் புகார் விசாரணை முறையை தடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று  நாங்கள் நீதிமன்றத்தை கோரவிருக்கிறோம் என்று அஸ்மின் அலி சொன்னார்.

 

பெட்டாலிங் ஜெயா,  அக்டோபர் 19-  சிவப்பு சட்டை இயக்கத் தலைவரான  டத்தோ  ஶ்ரீ ஜமால் யூனோஸ்  இன்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 

இன்று காலை 8.30 மணியளவில், துபாயிலிருந்து தாம் வந்திறங்கிய போது, தாம் கைது செய்யப்பட்டதாக  ஜமால் யூனோஸ் தெரிவித்தார். 

1969-ஆம் ஆண்டு, மே 13-ஆம் தேதி நாட்டில் நிகழ்ந்த இனக்கலவரம் மீண்டும் நிகழும் என முகநூலில் பதிவு செய்ததற்காக டத்தோ ஶ்ரீ ஜமால் யூனோஸுக்கு எதிராக  கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. 

எனினும், அந்தப் பதிவு தமது பெயரில் உள்ள போலி முகநூல் கணக்கிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜமால் யூனோஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.