ஷாஅலாம், செப்.25- இன்று காலை புக்கிட் கெமுனிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் பத்து டன் எடை அளவிலான 7 லோரிகள் மற்றும் 2 டிரைலர் லோரிகள் தீக்கிரையாயின.

விடியற்காலை 12.50 மணியளவில் நிகழ்ந்த இந்தத் தீ விபத்தில் அதிஷ்டவசமாக எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து, விடியற்காலை 1.07 மணியளவில் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

தொழிற்சாலையின் வெளியே சில லோரிகள் எரிந்துக் கொண்டிருந்ததைக் கண்டனர் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் நிர்வாக அதிகாரி அலிமட்டியா புக்ரி தெரிவித்தார். 

ஷாஅலாம் தீயணைப்பு வண்டி சம்பவ இடத்திற்கு வந்தடைந்த போது தீ மிகவும் பயங்கரமாக எரிந்துக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். 

கடுமையான போராட்டத்திற்குப் பிறகு காலை 5 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், தீ விபத்துக்கான காரணம்  குறித்து   விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அலிமட்டியா புக்ரி சொன்னார். 

பிந்தூலு, செப்.25- மாந்திரிகச் சிகிச்சைப் பெற வந்த 3 பள்ளி மாணவிகளை ஏமாற்றி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 'போமோ' ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சுமார் 11வயது, 16வயது மற்றும் 17வயதுடைய பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகளையும் சிகிச்சைக்காக, அவர்களது குடும்பத்தினர் அந்தப் போமோவிடம் அழைத்து வந்ததாக சரவா சிஐடி தலைமை தலைவர் டத்தோ தேவ்குமார் கூறினார். 

அந்தப் போமோ மருத்துவக் குளியல் செய்ய வேண்டும் என்று அவர்களைக் குளியலறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார் என்று சிஐடி தேவ் குமார் கூறினார். 

இந்தச் சம்பவங்கள் வெவ்வேறான மூன்று இடங்களில் நிகழ்ந்துள்ளன என்று அவர் சுட்டிக் காட்டினார். கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி 11 வயது பெண்ணையும் 10ஆம் தேதி 16 வயது பெண்ணையும் 22ஆம் தேதி 17 வயது பெண்ணையும் அந்தப் போமோ பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது என அவர் சொன்னார்.

17 வயது பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தந்தையிடம் கூறியதும், அவர் அந்தப் போமோவை முகத்தில் குத்தித் தரதரவென இழுத்து வந்து பிந்தூலு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் இழுத்து வந்தார் என்று தேவ்குமார் கூறினார்.

விசாரணைக்காக கடந்த சனிக்கிழமை தொடங்கி 7 நாட்களுக்கு அந்தப் போமோ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

 

கோலாலம்பூர், செப்.25- நாட்டிலுள்ள 33 ஆறுகள் கடுமையான தூய்மைக்கேடு அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளன. இந்த 33 ஆறுகளும் நகரப் பகுதிகளில் அமைந்துள்ளவை என்று இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு டத்தோஶ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபார் கூறினார். 

மலேசியா நாட்டில் சுமார் 477 ஆறுகள் உள்ளன. அதில் 33 ஆறுகள் கடுமையான தூய்மைக்கேடு அடைந்துள்ளன. இந்த ஆறுகளில் அருகிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகளே ஆறுகளின் கடுமையான தூய்மைக்கேட்டிற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது.

அதோடு, ஆற்றில் குப்பைகளை வீசுவதும் இந்த தூய்மைக்கேட்டிற்குக் காரணமாக அமைகின்றது. இது மக்களின் பொறுப்பற்ற செயல்களைக் குறிக்கிறது. இதனால் ஆறுகள் தூர்நாற்றம் வீசுவதோடு அதன் நிறமும் மாறிய நிலையில் உள்ளன.

சுங்கை பினாங்கு, சுங்கை ஜெலுதோங் ஆறு மற்றும் சுங்கை பென்சாலா ஆகிய மூன்று ஆறுகள் கடுமையாக தூய்மைக்கேடு அடைந்துள்ளன என டத்தோஶ்ரீ வான் ஜுனைடி தெரிவித்தார்.   

 

 கூச்சிங், செப்.25- இங்குள்ள கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இலகு ரக விமானம் ஒன்று, ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதில் மாநில அமைச்சர் உட்பட 6 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

முக்கா என்ற இடத்திலிருந்து இங்கு தரையிறங்கிய ஹொர்ன்பில் ஸ்காய்வே தனியார் நிறுவனத்தின் “Beechcraft Super King Air B200GT” ரக விமானத்தில் சரவா மாநில சமூக நல, மகளிர், குடும்பம் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ பாத்திமா அப்துல்லா பயணம் செய்தார். இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர்த் தப்பினர். 

கடும் மழையினால் வீசிய பலத்த காற்றினால் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சுமார் 500 மீட்டர் தூரம் வரை சென்று நின்றது என்று மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குனர் நோர் ஹிஷாம் முகமட் கூறினார். 

நேற்று மாலை 6 மணியளவில் அழைப்பு வந்ததை அடுத்து தபுவான் ஜெயா தீயணைப்பு நிலையத்திலிருந்து 8 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார். விமானத்திலிருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று ஹிஷாம் தெரிவித்தார். 

விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் பணியை மேற்கொள்ள விமான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று மலேசிய விமான நிலைய ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மூத்த நிர்வாகி முகமட் நட்சிம் ஹாஷிம் கூறினார். விமான ஓடுபாதை மீண்டும் இன்று இரவு 10.30 மணிக்கு திறக்கப்படும் என்றார் அவர்.

 

கோலாலம்பூர்,செப்.25- பேராவைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி  கடந்த இரண்டு வருடங்களாக, இணையத்தில் அறிமுகமான ஒருவனின் கட்டாயத்திற்கும் மிரட்டலுக்கும் அஞ்சி தன்னுடைய நிர்வாணப் படங்களை அவனுக்கு அனுப்பி வந்த சம்பவம் நடந்துள்ளது.

சீனா நாளிதழான சின் சியுபாவ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

பள்ளித் தோழிகள் கைத்தொலைப்பேசியில் படங்களைப் பார்த்து கொண்டிருக்கும் போது சம்பந்தப்பட்ட மாணவியின் நிர்வாணப் படங்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இது பற்றி சக தோழிகள் அவளிடம் கேட்டப்போது அவள் நடந்தவற்றை தோழிகளிடம் கூறினாள். முதலில், அந்த ஆடவன் தன்னை ஏமாற்றி தன்னுடைய நிர்வாணப் படத்தைப் பெற்றுக் கொண்டான் என அவள் கூறினாள்.

தொடர்ந்து, நிறைய படங்களை அனுப்புமாறும் இல்லையெனில், அவனிடம் உள்ள முதல் படத்தைச் சமூக வலைத்தளங்களில் போட்டு விடுவேன் என மிரட்டினான். 

அந்தப் பயத்தின் காரணமாகத்தான் அவன் கேட்டபொழுதெல்லாம் படத்தை அனுப்பினேன் என்று அந்த மாணவி கூறினார். அவளுடைய  தோழிகள் இதுகுறித்து ஆசிரியரிடம் கூறினார்கள். உடனே ஆசிரியர்கள் இதைப் பற்றி அம்மாணவியின் பெற்றோரிடம் தகவலைச் சொன்னார்கள்.  அவர்கள் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.

 பட்டர்வொர்த், செப்.25- இங்கு ஜாலான் சிராமிலுள்ள தங்க நகைக் கடைகளுக்கு தங்கம் வினியோகம் செய்யும் வர்த்தக அலுவலகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிரக் வாகனத்திலிருந்து 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 10 கிலோ தங்கத்தை மூன்று கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றனர்.

காலை 9.30 மணியளவில், இரண்டாவது மாடியிலுள்ள அந்த வர்த்தக அலுவலகத்திலிருந்து வெளியே வந்த இரண்டு ஊழியர்களை டிரக்கிற்கு வந்த வேளையில், சிவப்பு நிறக் காரில் வந்த மூன்று கொள்ளையர்கள் டிரக்கை வழிமறித்து காரை நிறுத்தினர்.

பின்னர் அந்த மூவரில் இருவர் காரை விட்டு இறங்கி, கோடரி மற்றும் கத்தியுடன் பாய்ந்து சென்று இரண்டு பைகளில் இருந்த தங்கத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். 

அதே சமயத்தில் பாதுகாவலர் ஒருவர் அந்தக் கொள்ளையர்களின் காரை நோக்கி இரண்டு முறை தம்முடைய துப்பாக்கியால் சுட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அப்பகுதியைச் சுற்றி வளைத்த போலீசார் இதுகுறித்து புலன் விசாரணை நடத்தினர்.

 கோலாலம்பூர், செப்.25- சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளில் காரில் செல்லும் பயணிகள் அனைவரும் விரைவில் தங்களின் பெருவிரல் ரேகை ஸ்கேனிங் முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். உட்லேண்ட்ஸ் மற்றும் துவாஸ் ஆகிய சோதனைச் சாவடிகளில் இது அமலாக உள்ளது.

சிங்கப்பூரிலிருந்து கார் மூலம் உள்ளே செல்பவர்களும் வெளியே வருபவர்களும் குடிநுழைவு அனுமதிக்காக இரண்டு பெருவிரல் ரேகைகளையும் ஸ்கேனிங் இயந்திரத்தில் பதிவு செய்யும் முறை அமலாக இருக்கிறது. குறிப்பாக, 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஸ்கேனிங் முறை அமலாகிறது.

கார்களுக்கான முகப்பிடங்களில் காரை விட்டு கீழே இறங்கி கைப் பெரு விரல்கள் ரேகைகளை கார் ஓட்டுனர் மற்றும் பயணிகள் அனைவரும் ஸ்கேனிங்கில் பதிவு செய்யவேண்டும் என்று குடிநுழைவு சுங்கச் சோதனைச் சாவடி துறையின் அறிக்கை தெரிவித்தது.

இந்த நடைமுறை கடந்த ஏப்ரலில் அமலுக்கு வந்துவிட்டது என்ற போதிலும் தற்போது  ரயில் பயணிகள், பஸ் பயணிகள் மற்றும் லோரிகள், சரக்கு வாகனங்கள் ஆகியவை மட்டுமே இதைக் கடைபிடித்து வருகின்றன.

கார்களும் இந்த முறையை விரைவில் கடைபிடிக்கத் தொடங்கும் போது குடிநுழைவை விட்டு வெளியெறுவதில் சற்று காலதாமதம் ஏற்படலாம். இந்த நடைமுறைக்கு பயணிகள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு வசதியாக சுங்கச் சாவடிகளில் இது கட்டம் கட்டமாக அமலாக்கப்படும் என்று அந்த அறிக்கை கூறியது. 

More Articles ...