பாசத்துடன் வளர்த்த அடர்ந்த கூந்தலை  இழந்தார் ஆசிரியை அஞ்சலி! 

சமூகம்
Typography

 

ஜோர்ஜ்டவுன், ஜூலை.17- ஆசையாக வளர்த்த தனது அடர்த்தியான கூந்தலை ஒரு நல்ல நோக்கத்திற்காக இழந்தார் 22 வயதுடைய ஆசிரியை அஞ்சலி... 

ஆசிரியை அஞ்சலி., பினாங்கு அட்வென்டிஸ்ட் மருத்துவமனை ஏற்பாடு செய்த "கோ பால்ட், ஓ டெ டிஸ்டன்ஸ்" (Go bald.,Go distance) எனும் உணவுத் திருவிழா மற்றும் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் தனது அழகிய கூந்தலை மொட்டையடித்துக் கொண்டார். 

இத்தனை நாட்களாக பொத்திப் பொத்திப் பாதுகாத்து வளர்த்த சுருள் சுருளான கூந்தலை திடீரென்று இழப்பது வருத்தமளித்தாலும் ஒரு நல்ல நோக்கத்திற்காக அதனை இழப்பதால் மன நிறைவையே அளிக்கிறது என அஞ்சலி கூறினார்.

பினாங்கு அட்வென்டிஸ்ட் மருத்துவமனையில், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் மக்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 180பேர் பங்கு பெற்றனர்.

இதில், மாநில சமுக நல, சுற்றுசூழல் இயக்கத்தின் தலைவர் பீ புன் போ மற்றும் பூலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் யாப் சோ ஹுவே ஆகியோரும் இந்த மொட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

இதனிடையே, வருகையாளர்களைக் கவரும் வகையில் நாட்டின் புகழ்பெற்ற பாடகர் எலிகேட்ஸ் லோகனாதன் அவர்களின் புதல்வி தாஷா லோகனின் இசை படைப்பும், ஸ்டார்ஸ் பேண்ட் மற்றும் அதிர‌ஷ்ட குலுக்கும் இடம்பெற்றது.

மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்த சமூக நிகழ்ச்சி இம்முறை 10 லட்சம் ரிங்கிட்டைப் பெறுவதை இலக்காக கொண்டுள்ளது என பினாங்கு அட்வென்டிஸ்ட் மருத்துவமனையின் தலைவர் ரோனல்ட் கோ சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS