கட்டொழுங்கு பிரச்சினை: பள்ளிகள் கூடுதல் பாதுகாப்பு! -துணையமைச்சர்

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், ஆக.19- கட்டொழுங்குச் சீர்கேடுகள் நிறைந்த பள்ளிகள் என்று பட்டியலிடப்பட்ட 402 பள்ளிகளும் பாதுகாப்பான சூழலில்தான் உள்ளன  துணைக் கல்வி அமைச்சர் டத்தோ சோங் சின் வூன் பெற்றோர்களுக்கு உறுதியளித்தார்.

சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கட்டொழுங்கு பிரச்சினைகளைக் குறைப்பதற்கு போலீசும் கல்வி அமைச்சும் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற அவசியமில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 

இந்தப் பட்டியலில் இடம்பெற்ற பள்ளிகள் யாவும் மோசமான அல்லது பிரச்சனைமிக்க பள்ளிகள் என்று எண்ணக்கூடாது. இதுவொரு தப்பான கருத்தாகும். அந்தப் பள்ளிகள் மிகுந்த பாதுகாப்புடனும் கண்காணிப்புடனும் இருக்கின்றன என்று டத்தோ சோங் தெரிவித்தார்.

கட்டொழுங்கு சீர்கேடுகள் நிறைந்த பள்ளிகள் பட்டியலில் இடம்பெறாத பள்ளிகளில் கட்டொழுங்கு பிரச்சனைகள் இல்லை என்று சொல்ல முடியாது என அவர் தெரிவித்தார்.

பட்டியலிடப்பட்ட 402 பள்ளிகளில் 311 பள்ளிகள்  கட்டொழுங்கு சீர்கேட்டுப் பிரச்சினைகள் நிறைந்த பள்ளிகளாகவும் எஞ்சிய 91 பள்ளிகளும் அதிக கட்டொழுங்கு மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் பள்ளிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS