71 வயது தாத்தா ஓட்டிய கார் பெட்ரோல் நிலைய கடை உள்ளே பாய்ந்தது!

சமூகம்
Typography

ஜொகூர் பாரு, செப்.13 – நேற்று மாலை பண்டார் பாரு உடாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, பெட்ரோல் நிலையத்தில் உள்ள கடையின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து விபத்துக்குள்ளாகியது. 

71 வயதுடைய நபர் தனது புரோடுவா கெனாரி காருக்குப் பெட்ரோல் நிரப்பி விட்டு செல்லும் போது,  கட்டுப்பாட்டை இழந்து கார் அங்கிருந்த கடையினுள்  நுழைந்து விபத்துக்குள்ளாகியது என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.

தனது காருக்குப் பெட்ரோல் நிரப்பிய பிறகு, காருக்குள் உட்கார்ந்த அந்த 71 வயது நபர் பார்ப்பதற்குச் சற்று உடல் நலம் சரியில்லாமல் இருந்ததுபோல தெரிந்தது. பிறகு, அங்கிருந்து காரை எடுக்கும் போதே பெட்ரோல் நிரப்ப காத்துக் கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளையும் கார் ஒன்றையும் இடித்ததாக ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட துணை ஆணையர் முகமட் தைப் ஹமார் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் இல்லாமல் போனது அதிஷ்டவசமாக அமைந்தது. மேலும், இந்த சம்பவத்தினால் அந்த பெட்ரோல் நிலையத்தில் எந்த ஒரு தீ விபத்தும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அந்த விபத்து நடக்கும் வேளையில் அக்கடையினுள் ஒரு பணியாளர் மட்டுமே இருந்ததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்தைப் போலீஸ் பதிவு செய்த பிறகு அந்த வயதான ஆடவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 43 (1) பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS