தாக்க வந்த பெண் காரோட்டியிடம்  பொறுமை காத்த அதிகாரிக்கு விருது! -(VIDEO)

சமூகம்
Typography

 சுபாங் ஜெயா, செப்.13- காரின் 'ஸ்டியரிங்'கைப் பூட்டும் இரும்புக் கம்பியுடன் ஆவேசமான முறையில் ஒரு பெண் மிரட்டிய போதிலும், தாறுமாறாக திட்டித் தீர்த்த போதிலும், கோபமோ, ஆத்திரமோ அடையாமல் பொறுமைக் காத்த சுபாங் ஜெயா நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரி ஒருவருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

"பொறுமை பேணு" என்பது, வெறும் சுலோகமல்ல. அதுவொரு வாழ்க்கை நடைமுறை" என்பதை நோர்சாபான் நோர்டின் என்ற அந்த அதிகாரி நிருபித்துக் காட்டியுள்ளார்.

பூச்சோங்கில், விதிமுறைகளுக்குப் புறம்பாக நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய கார், நகர முடியாத வகையில் பூட்டுப் போடப்பட்டதால் ஆத்திரமடைந்த வாகன மோட்டியான ஒரு பெண்மணி 'ஸ்டியரிங்'கை பூட்டும் இரும்புடன் வந்து நோர்சாபானைத் தடுத்து நிறுத்தினார். 

அவரை கோபமாக, தாறுமாறாக கூச்சலுட்டு திட்டித் தீர்த்தார். மேலும், கையிலிருந்த இரும்பினால் தாக்குவதற்கும் முற்பட்டார். எனினும், அந்தச் சூழ்நிலையில் கோபம் அடையாமல், மறுமொழி பேசாமல் மவுனம் காத்தார் நோர்சாபான்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, சமூக ஊடங்களில் பரவி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வலைத்தளவாசிகள் பலரும், பொறுமை காத்த அந்த நகராண்மைக் கழக அதிகாரியைப் பாராட்டினர். அதேவேளையில் அந்தப் பெண் கடும் கண்டனத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில், பணி நன்னடத்தைப் பேணி பொறுமையைக் கடைபிடித்து, ஒரு முன்னுதாரணமாக விளங்கிய 31 வயதுடைய நோர்சாபானுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகரான ஹன்னா இயோ, கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஷி ஹான், சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் இடைக்காலத் தலைவர் முகமட் ஷூல்கர்னின் ஆகியோர், நோர்சாபானுக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.

"இது போன்ற பல சம்பவங்கள் என் வாழ்வில் பலமுறை நடந்துள்ளன. இதைவிட மோசமாகக் கூட என்னிடம் நடந்து கொண்ட வாகன மோட்டிகள் இருக்கவே செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை என்னுடைய பணி நாளில், இதுவும் ஒரு நாள்.., அவ்வளவுதான்" என்று சான்றிதழைப் பெற்றுக் கொண்ட பின்னர் நோர்சாயான் கூறினார். 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS