ஜி.எஸ்.டியை மாற்றுவதா? உலகமே  நம்மைப் பார்த்து சிரிக்கும்! –டி.சுப்ரா

சமூகம்
Typography

கோத்தா திங்கி, செப்.13- நடப்பில் இருக்கும் ஜி.எஸ்.டி எனப்படும் பொருள், சேவை வரிக்குப் பதிலாக எஸ்.எஸ்.டி எனப்படும் விற்பனை, சேவை வரியைக் கொண்டுவந்தால் மலேசியா நகைப்புக்குள்ளாகி விடும் என்று சுங்கத்துறை தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ டி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.  

கடந்த 2015ஆம் ஆண்டில்தான் எஸ்.எஸ்.டி.க்குப் பதிலாக ஜி.எஸ்.டி வரியைக் கொண்டு வரப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி முறை மிகவும் விரிவான, ஆக்ககரமான, வெளிப்படைத் தன்மைக் கொண்ட ஒரு வரிவிதிப்பு முறையாக விளங்குகிறது என்று அவர் சொன்னார். 

உலகில் 168 நாடுகள் இதே போன்ற ஜி.எஸ்.டி வரிமுறையைத் தான் கொண்டுள்ளன. மேலும், மத்திய கிழக்கு நாடுகள் இந்த ஜி.எஸ்.டி முறையைக் அமல் படுத்தவிருக்கின்றன. அடுத்த ஆண்டிலிருந்து ஐக்கிய அரபு சிற்றரசு இந்த முறையை அமல்படுத்த உள்ளது என்று அவர் சொன்னார்.

"நாம் ஜி.எஸ்.டியைக் கைவிட்டு விட்டு மீண்டும் பழைய எஸ்.எஸ்.டி முறைக்குச் செல்வோமேயானால், இந்த உலகமே நம்மைப் பார்த்துச் சிரிக்கும் என்று டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் சுட்டிக்காட்டினார். கோத்தா திங்கியில் ஜி.எஸ்.டி அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அடுத்துவரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டிக்குப் பதிலாக எஸ்.எஸ்.டி.யை மீண்டும் அறிமுகப்படுத்துவோம் என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.எஸ்.டிக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையாகக் குறை கூறப்படுவது குறித்து தாம் வருத்தம் அடைவதாக டத்தோஶ்ரீ  சுப்பிரமணியம் குறிப்பிட்டார். 

இதைவிட வேதனையான விஷயம் என்னவெனில், தங்களின் சொந்த இலாபத்திற்காக சில முன்னணி அரசியல் தலைவர்கள் உண்மையைத் திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS