தமிழ்மலர் மீது தாக்குதல்; நடவடிக்கை  கோரி பிரதமர் துறையில் மகஜர்!

சமூகம்
Typography

 புத்ராஜெயா, செப்.13- தமிழ் நாளிதழான 'தமிழ் மலர்' அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், இன்று பிற்பகல் 3 மணியவில் பிரதமர் அலுவலகத்தில் ஆட்சேப மகஜர் வழங்குவதற்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

தமிழ் மலருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து புலன் விசாரனை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த மகஜர் வழங்கப்பட்டது.

தமிழ் மலர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அப்பத்திரிக்கையின் உரிமையாளர் ஓம்ஸ் தியாகராஜன், சட்ட ஆலோசகரும் அரசியல் ஆய்வு விமர்சகருமான சரஸ்வதி கந்தசாமி மற்றும் ஒரு நிருபர் ஆகியோர் அந்தக் கும்பலால் தாக்கப்பட்டனர்.

இந்தக் கும்பலுக்கு இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ சரவணன் முன்னிலை வகித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. 

எனினும், இந்தச் சர்ச்சையை அறிந்து சமரசப்படுத்தும் நல்ல நோக்கிலேயே சம்பவ இடத்திற்கு தாம் சென்றதாக டத்தோ சரவணன் விளக்கம் அளித்திருந்தார். 

இந்தச் சம்பவத்தில் ஓம்ஸ் தியாகராஜன், வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பில் டத்தோ சரவணனுக்கு எதிராக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, இன்று புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் மகஜர் வழங்கப்பட்டது.

அரசியல் மர்றும் பொது இயக்கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று பிரதமர் அலுவலகம் முன் திரண்டனர். கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவனேசன், சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, ஏ.கே. ராமலிங்கம்  ஆகியோர் இதில் கலந்துக் கொண்டனர்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS