பரத நடனமணி டான் மெய் மெய் - சேலை கட்டிவிடுவதிலும் வல்லவர்!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், அக்.12- சீனப் பெண்கள் சேலை கட்டிக் கொள்வது புதிதான விஷயமல்ல. ஆனால், சீனப் பெண்கள் அடுத்தவருக்கு பரதச் சேலையை கட்டிவிடுவது என்பது புதுமையான விஷயமே. 

டான் மெய் மெய் என்ற 38 வயதான அந்தச் சீனப் பெண்மணி, சுத்ரா நடனப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக பரதம் பயின்று வருகிறார். அங்கு நடனமாடும் நடனமணிகள் தங்களின் சீருடையான பரதச் சேலைகளை சொந்தமாக கட்டிக் கொள்ள வேண்டும். 

அவ்வாறுதான் சேலைகளை கட்டிக் கொள்ள தான் பயின்றதாகவும், சிறிது காலம் கழித்து அதில் கைதேர்ந்தவராகி விட்டதாகவும் அவர் சொன்னார். 

நூல் வகை சேலைகளே, தனக்குப் பிடித்த சேலை வகை என்றும், பலவிதங்களில் தனக்கு சேலைகளைக் கட்டத் தெரியும் என்றும் அவர் கூறினார். 

டான் மெய் மெய்யின் சேலை கட்டும் நிபுணத்துவத்தை சுத்ரா நடனப் பள்ளி நிறுவனர் டத்தோ ரம்லி இப்ராஹிம் பாராட்டியுள்ளார். அந்த நடனப் பள்ளியில் பரதம் பயிலவரும் அனைத்து புதிய மாணவர்களுக்கும், பரதச் சேலையை கட்டுவது எப்படி? என்ற பாடத்தை மெய் மெய்தான் சொல்லித் தருகிறார். 

"விழாக்களுக்கு சேலை கட்டுவது போல் அல்லாமல், பரதச் சேலையை வேறு வகையில் கட்டவேண்டும். ஆடுவதற்கு எளிதாக இருக்கும் வகையில் அந்தச் சேலைகள் கட்டப்பட வேண்டும்," என்றார் அவர். 

எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் கோனார்க் பரத விழாவில், நடனப் பள்ளி மாணவர்கள் கலந்துக் கொள்ள விருப்பதாகவும், அங்கு தனது சேலை கட்டும் நிபுணத்துவத்தை அனைவருக்கும் வெளிப்படுத்தவிருப்பதாகவும் மெய் மெய் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS