ஒற்றுமைக்குக் குரல் கொடுத்த மலாய் ஆட்சியாளர்!- மோகன் ஷான்

சமூகம்
Typography

 கோலாலம்பூர், அக்.12- மலேசிய மக்களிடையே காணும் ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வண்ணமாக சில இனவாதிகள் செயல்படுவது குறித்து மலாய் ஆட்சியாளர்களின் கருத்து பாராட்டுக்குரியது என்று  மலேசிய சர்வ சமய ஆலோசனை மன்றத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான் கூறினார். 

நாட்டின் கூட்டாட்சி அரசியலமைப்பினை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற மலாய் ஆட்சியாளர்கள் கருந்து வரவேற்கத்தக்கது, என்றார் அவர். 

'முஸ்லிம்களுக்கு மட்டும்' என்ற அறிவிப்புப் பலகை ஒன்று ஜொகூரிலுள்ள சலவை நிலையம் வைக்கப்பட்டிருந்ததை ஜொகூர் சுல்தான் கண்டித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

"அந்தச் சலவை நிலையத்தின் செயலை அரசியல் தலைவர்கள் கண்டிப்பர் என்று நாங்கள் பெரிதும் எதிர்பார்த்தோம். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, அவர்கள் இது குறித்து ஏதும் பேசவில்லை," என்றார் அவர். 

"இந்த மாதிரியான செயல்கள் கண்டிக்கப்படாவிடில், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும். மேலும் பலர், 'கேட்பார் யார்' என்ற போக்கில் மேலும் இத்தகைய விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவர்," என்று அவர் மேலும் கூறினார். 

"பல்வேறு மதத்தினர் வாழும் இந்நாட்டில், சமய வேறுபாடுகள் இருப்பது புதிதல்ல. ஆனால், அனைத்து மதத்தினையும் நாம் மதிக்க வேண்டும். அடுத்த மதத்தினரை கேவலப் படுத்தக் கூடாது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகி விட்ட போதும், இவ்வாறான சிலரின் செயல்கள் நாட்டின் அடிப்படையையே கேள்விக்குறி ஆக்குகின்றது," என்றார் அவர். 

அரசியல் தலைவர்கள், இத்தகையச் செயல்கள் குறித்து மௌனம் சாதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS