பொருள் விலைகள் அதிகரிப்பு; தீபாவளிக்கு வந்த சோதனை! வியாபாரிகளுக்கு வேதனை!!

சமூகம்
Typography

கோலாலம்பூர், அக்.12- பிரிக்பீல்ட்ஸ் 'லிட்டல் இந்தியா'வில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டி விட்டது. பாட்டுச் சத்தம் தெருவெல்லாம் முழங்குகிறது. வீதிமுழுவதும் கடைகள் போடப்பட்டு விட்டன. சேலை, சல்வார் கமீஸ், பலகாரங்கள், பஞ்சாபி ஆடைகள் மற்றும் அணிகலன்கள் பளபளக்கின்றன. ஆனால், வியாபாரிகளின் முகத்தில்தான் சந்தோஷக் கலையே காணவில்லை...,

கடந்த வருடங்களைக் காட்டிலும், இவ்வருடம் பொருட்களின் விலைகளைக் குறைத்து விற்பனை செய்த போதிலும், அவற்றை வாங்குவதற்கு ஆள் இல்லை என்று வியாபாரிகள் கவலைக் கொண்டுள்ளனர். 

கடந்த வருடங்களில், தாம் விற்பனைச் செய்த சல்வார் கமீஸ் ரக ஆடைகளை மக்கள் விரும்பி வாங்கியதைப் போன்று இவ்வருடமும் வாங்குவார்கள் என்று எதிர்பார்த்து, ஏராளமான சல்வார் கமீஸ்களுடன் பத்து நாட்களுக்கு முன்பே கடையைப் போட்ட ஷூமிக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம்தான். 

"கடந்த ஏழு வருடங்களாக நான் இங்கு வியாபாரம் செய்து வருகிறேன். இவ்வருடம், மக்களின் கவனம் ஏதும் துணிமணிகளின் மீது இல்லை. போன வருடம், இந்தத் தினத்தில், என்னிடத்தில் விற்பனைச் செய்யாமல் வெறும் 50 ஆடைகளே மிஞ்சி இருந்தன. இவ்வருடம், நான் வெறும் 5 ஆடைகள் மட்டும்தான் விற்பனைச் செய்துள்ளேன்," என்று அவர் கவலையுடன் கூறினார்.

தனது கடைக்கு வருபவர்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து கவலைக் கொள்வதாகவும், அதன் காரணமாக இதர செலவுகளை குறைத்து விட்டதாகவும் கூறுகின்றனர் என்று அவர் சொன்னார். மாவு, தானியம், கச்சான் போன்ற பொருட்களின் விலை அதிகரித்துள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

புக்கிட் ஜாலில் பகுதியில் போடப் பட்டுள்ள கடைகளில் இந்தத் துணிமணிகளின் விலைகள் குறைவாக இருப்பதாகவும், மக்கள் அங்குக் கூட்டம் கூட்டமாக செல்வதாகவும், அதனால் தங்களுக்கு நஷ்ட மடைவதாகவும் சில வியாபாரிகள் கருத்துரைத்தனர். 

புக்கிட் ஜாலில் பகுதியில் கடைப் போட்டுள்ள வியாபாரிகள் மொத்த வியாபார அடிப்படையில் பொருட்களை விற்பனை செய்வதால் அவற்றின் விலைகள் குறைவாக உள்ளதாக சித்ராதேவி கூறினார்.

பத்து ரிங்கிட் லாபம் பெற்றால் போதுமானது என்ற அடிப்படையில்தான் அந்தத் துணிகளை தான் விற்பனை செய்வதாகவும், அவற்றை வாங்குவதற்கு தான் செலவிட்ட பணத்தை அந்த 10 ரிங்கிட் லாபம் ஈடுகட்டும் எனவும் அவர் சொன்னார். 

இதனிடையே, கடந்த வருடங்களைக் காட்டிலும், இவ்வருடம் துணிமணிகளை வாங்குவதில் தான் சிக்கனத்தை கடைப்பிடிப்பதாக வாடிக்கையாளரான மாலதி என்பவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, கடந்த வருடங்களில் பலகாரங்களை ஆர்டர் செய்து வாங்கியவதாகவும், அவற்றின் விலை இவ்வருடம் அதிகரித்து விட்டதால், சொந்தமாகவே செய்யும் முயற்சியில் தாம் இறங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"என்னுடைய கடையில் விற்பனை நடக்கின்றது. ஆனால், ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அப்பொருட்கள் மற்ற இடங்களில் எந்த விலைக்கு விற்கப்படுகிறது என்பதை நன்கு ஆராய்ந்த பின்னரே வாங்குகின்றனர்," என்று நகை மற்றும் ஆபரண அணிகலன் வியாபாரியான செல்லப்பா கருத்துரைத்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS