'பீர் விழா' மலேசியர்களின் கலாசாரம் அல்ல! -நஸ்ரி கருத்து!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், அக்.13- 'பீர் விழா' என்பது மலேசியர்களின் கலாசாரம் அல்ல. எந்த வகையிலேயும் அதை நாட்டு மக்களின் எண்ணத்தில் புகுத்தக் கூடாது என்று சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் நஸ்ரி அஜிஸ் கூறினார். 

1971-ஆம் ஆண்டு வகுப்பட்ட தேசிய கலாசார கொள்கையின்படி, நாட்டின் பழங்குடி கலாசாரத்தின் அடிப்படையில்தான் கொள்கைகள் இருக்கவேண்டும். அதன்படி, இஸ்லாம் மதத்தை ஒரு முக்கிய அங்கமாகக் கருதி, இந்த கொள்கைகள் அமைய வேண்டும் என்று அவர் கருத்துரைத்தார். 

"மலேசியா ஒரு இஸ்லாம் நாடு என்ற அடிப்படையில் நான் இதைக் கூறவில்லை. மாறாக, மலேசியாவிலுள்ள மலாய்க்கார்ர்களோ, சீனர்களோ, இந்தியர்களோ அல்லது கடாஷான் இனத்தவரோ இந்த 'பீர் விழா'வை கொண்டாடுவதில்லை என்ற அடிப்படையில் இதனைத் தெரிவிக்கின்றேன்," என்றார் அவர்.

ஜெர்மனி அல்லது பவேரியா போன்ற நாடுகளின் கலாசாரங்கள் வேறு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

"அந்நாடுகளில் தயாரிக்கப்படும் பீர்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் அக்டோபர் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. நம் நாட்டில் பீர் தயாரிக்கப் படுவதில்லை," என்றார் அவர்.

இம்மாதிரியான விழாக்கள் தடை செய்யப்பட்ட போதிலும், மது அருந்துவதற்கு நாட்டில் எவ்வித தடையும் விதிக்கப்படாது என்பதையும் அவர் தெரிவித்தார். 

"மது அருந்த விரும்புவோர், மதுபான விடுதிகளில் தாராளமாக மது அருந்தலாம். அங்கு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு உற்சாகம் அடைபவர்களை கட்டுப்படுத்த தனி ஆட்கள் இருப்பார்கள். ஆனால், 'பீர் விழா'வில் அதிகமானோர் குடித்து விட்டு பிரச்சினைகளை எழுப்பும் பட்சத்தில், அக்கூட்டத்தினை யாரால் கட்டுப்படுத்த இயலும்?" என்று அவர் வினவினார். 

ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த விழா ஒன்றைச் சுட்டிக்காட்டி, அவ்விழாவில் சிலர் போதை மருந்துகளை உண்டு, அதனால் 11பேர் இறந்ததைத் தொடர்ந்து, அந்த விழா தடைச் செய்யப்பட்டது என்றும் நஸ்ரி தெரிவித்தார்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS