'எங்களின் "பேபி"யைக் கொன்று விட்டனர்!'  மாநகராண்மை மீது லில்லி போலீஸ் புகார்

சமூகம்
Typography

சிரம்பான், அக்.13- கால்வாயில் விழுந்த நாய் ஒன்றைக் காப்பாற்றி வெளியில் எடுத்தப் பின்னர், அதனை உடனடியாக கொன்ற மாவட்ட நகராண்மை மன்றத்தின் செயல் குறித்து நாயின் உரிமையாளர்கள் கடும் கொந்தளிப்புக்கு  உள்ளாயினர்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தனது வளர்ப்பு நாயான 'பேபியை' கொன்றதற்காக கோலப்பிலா நகராண்மை மன்றத்தின் மீது கே.லில்லி என்ற பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

அந்த நாய், ஒரு குடும்பத்தினரால் வளர்க்கப்படும் செல்லப்பிராணி என்றுபெடுத்துச் சொல்லப்பட்ட நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் 'பேபி'யை ஊசி போட்டுக் கொன்றதாக அந்த மூன்று நகராண்மை மன்ற அதிகாரிகளின் மீது அவர் புகார் செய்திருக்கிறார் லில்லி. 

'பேபி' கடந்த வெள்ளிக்கிழமையன்று, தாமான் டேசா மெலாங் என்றப் பகுதியிலுள்ள தங்களின் வீட்டு வளாகத்திலுள்ள கால்வாயில் தவறி விழுந்து விட்டது. அதனை வெளியே எடுக்க முடியாத அவரின் தாயார், பேபிக்கு தொடர்ச்சியாக சாப்பாடு வழங்கி வந்ததாக லில்லி கூறினார். 

அதன் பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை, பேபியை கால்வாயிலிருந்து வெளியேற்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரை அவரது தாயார் தொடர்புக் கொண்டதாக அவர் மேலும் கூறினார். 

பேபி இங்கும் அங்கும் ஓடியதால் மீட்க முடியாத தீயணைப்பு மற்றும் மீட்புப்படை அதிகாரிகள், மாவட்ட நகராண்மை மன்றத்தினரை தொடர்புக் கொண்டனர். அந்த மூன்று அதிகாரிகளும், பேபியை வெளியில் எடுத்தப் பின்னர், அதனை நகராண்மை வளாகத்திற்கு கொண்டு சென்று ஊசி போட்டு கொன்றனர் எனத் தன்னுடைய புகாரில் லில்லி தெரிவித்துள்ளார்.

இம்மாதிரியான சூழல் ஏற்படும் போது, மாவட்ட நகராண்மை மன்றத்தினர் வழக்கமான தங்களின் நடைமுறைகளிலிருந்து சற்று மாறுபட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

உரிமம் இல்லாத பிராணிகளாக இருந்தாலும், அவற்றை இம்மன்றம் கண்டுபிடிக்கும் பட்சத்தில், அவற்றின் உரிமையாளர்கள் அதனைக் கோருவதற்கு சில தினங்கள் அவகாசம் வழங்கவேண்டும். உடனடியாக அப்பிராணிகளை கொல்லக்கூடாது என்று லில்லி வலியுறுத்தினார். 

பிராணிகளை வளர்க்க விரும்புவோர், அவற்றுக்கு உரிமம் எடுக்க வேண்டும். அந்த உரிமத்தை அவற்றின் கழுத்தில் அணிய வேண்டும். அதுவே சட்டம். அப்படி அணிந்திருக்காத பட்சத்தில் அவை கொல்லப்படும் என்று கோலப்பிலா நகராண்மை மன்றத் தலைவர் ஷாருல் நிஜாம் சாலே கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS