தீபாவளிக்கு ஒரேயொரு நாள் விடுமுறையா? -யூனிசெல் பல்கலை.க்கு சிவராஜ் கண்டனம்

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், அக்.13- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள யூனிசெல் பல்கலைக்கழகம், தீபாவளித் திருநாளை முன்னிட்டு தனது மாணவர்களுக்கு ஒருநாள் விடுமுறையை மட்டுமே வழங்கி இருப்பதற்கு மஇகா இளைஞர் பிரிவு கண்டனம் தெரிவித்தது.

அந்தப் பல்கலைக்கழகத்தின் இத்தகைய செயல் இந்திய மாணவர்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுகிறது என்று மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் கூறினார்.

அப்பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19 தேதியன்று வழக்கம்போல் விரிவுரைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனிசெல் மாணவர்கள், தீபாவளித் திருநாளை தங்கள் குடும்பத்தாருடன் இணைந்துக் கொண்டாடும் பொருட்டு, அவர்களுக்கு குறைந்தப் பட்சம் 3 அல்லது 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் நஎன்று அவர் வலியுறுத்தினார்.

"ஹரிராயா பெருநாள் மற்றும் சீனப் பெருநாளுக்கு அந்தப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கியது. அதே போன்று இந்திய மாணவர்களுக்கும் ஒரு வார விடுமுறையை வழங்கலாம் அல்லவா? தீபாவளியும் நாட்டின் முக்கியப் பண்டிகைதான்," என்று அவர் தெரிவித்தார். 

இதனிடையே, இந்த ஒருநாள் விடுமுறையை மூன்று தினங்களுக்கு நீட்டிக்கவேண்டும் என்று இந்திய மாணவர்களின் பிரதிநிதி ஒருவர் அப்பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியதாகவும், அது குறித்து எவ்வித பதிலும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் சிவராஜ் சுட்டிக்காட்டினார்.

 

"இந்திய மாணவர்களின் இந்த வேண்டுகோளுக்கு யுனிசெல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முகமட் ரிட்சுவான் செவிமடுக்க வேண்டும். சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்திருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பாகுபாடான போக்குக்கு, அம்மாநில மந்திரிபுசார் அஸ்மின் அலியும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

 

இந்திய மாணவர்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்ய முடியாத பக்காத்தான் தலைவர்களால், நாட்டிலுள்ள இந்திய மக்களுக்கு நன்மைகள் செய்ய முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS