போலீஸ் வேட்டை: 45 வெளிநாட்டுத் தீவிரவாதிகள் கைது!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், அக்.13- இவ்வாண்டு மலேசியப் போலீசார் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் போது, பல நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதி கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புஸி ஹரூண் தெரிவித்தார். 

அபு சாயாஃப் குழுவைச் சேர்ந்த ஒன்பது பேர், ஃபெதுல்லாஹ் துர்க்கி அமைப்பைச் சேர்ந்த மூவர், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் உடன் சம்பந்தப்பட்டுள்ள அல்பானிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர், மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஜமாதுல் முஜாஹிடின் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர், அவர் கூறினார். 

"மீதமுள்ள 31 பேர், ஐ.எஸ் உடன் சம்பந்தப்பட்டவர்கள். அவர்கள் ஈராக்கைச் சேர்ந்தவர்கள்," என்றார் அவர். கடந்த ஜனவரி மாதம் முதற்கொண்டு அக்டோபர் 6 ஆம் தேதிவரை பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவால் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் அந்தத் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக அவர் தகவல் தெரிவித்தார். 

ஈராக் மற்றும் சிரியா நாடுகளிலுள்ள பயங்கரவாத அமைப்புகளின் தளங்கள் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த அமைப்புகளில் ஈடுபட்டிருந்த பயங்கரவாதிகள் மற்ற நாடுகளுக்குள் ஊடுருவி விட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இந்த சோதனைகளை மேற்கொண்டு வந்ததாக ஐஜிபி கூறினார். 

"ஐ.எஸ் மற்றும் இதர பயங்கரவாத அமைப்புகள் பல அதன் உறுப்பினர்களை மலேசியாவிற்குள் அனுப்பி, இங்கு பயங்கரவாத தாக்குதல்களை தொடங்கும் ஏற்பாடுகளை நடத்தி வருவதாகவும் நாங்கள் அறிந்துள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார். 

கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர், சோஸ்மா எனப்படும் 2012-ஆம் ஆண்டின்  பாதுகாப்பு குற்றங்களுக்கான (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டப் பிரிவின் கீழ் குற்றச்சாட்டப் பட்டுள்ளனர். 12 பேர், அவர்களின் சொந்த நாடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். இதர 12 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார். 

மலேசியாவிற்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்தில் நுழையும் பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்கத் தண்டனைகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS