தீபாவளிக்காக சாலை பாதுகாப்பு  நடவடிக்கைகள் தீவிரம்!!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், அக்.13- தீபாவளி பண்டிகைக் காலத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கும் பொருட்டு 10 நாட்கள் பாதுகாப்பு அமலாக்க சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தரைவழி பொது போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இன்று தொடங்கி அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அந்த சோதனைகள், காவல்துறை, சாலைப் போக்குவரத்து துறை, சாலைப் பாதுகாப்புத் துறை, தேசிய போதைத் தடுப்பு நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலை அமலாக்க நடவடிக்கை அமைப்புக்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படும் என்று தரை வழி பொது போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 

அக்டோபர் 12-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 22-ஆம் தேதி வரை தரைவழி பொது போக்குவரத்தை உபயோகிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இக்காலக் கட்டத்தில், வேக வரம்புகளை மீறும் பேருந்து ஓட்டுநர்களை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்படும். அவர்களின் வாகனங்களின் ஜி.பி.எஸ் பதிவுகளை கண்காணிக்க சிறப்புத் தணிக்கைக் குழு அமர்த்தப்பட்டுள்ளது.

விபத்துகள் அதிகம் நிகழும் ஆபத்தான இடங்களில், வேகப் பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை நடவடிக்கை மையங்களில் உள்கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு, வேக விதிகளை மீறும் பேருந்து ஓட்டுநர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்திருந்தது. 

நகர மையங்கள் மற்றும் பேரங்காடிப் பகுதிகளில் டிக்கெட் மற்றும் வாடகைக்கார்களை ஏற்பாடு செய்பவர்களும் இத்தினங்களில் கண்காணிக்கப்படுவர். டிக்கெட் முகப்பிடங்களில் பயண ஆவணச் சோதனைகளும் மேற்கொள்ளப்படும். 

இதனிடையில் சாலை விதிமுறைகளைப் பின்பற்றும் பொருட்டு, விரவு பேருந்து ஓட்டுநர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. பொறுப்பற்ற பேருந்து ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட்து என்று அந்த ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

2017-ஆம் ஆண்டு ஹரிராயா பெருநாளின் போது, 407 சாலைப் போக்குவரத்து குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், 2016-ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 306-ஆக பதிவாகியுள்ளதாகவும் 'ஸ்பாட்' எனப்படும் தரைவழி பொதுப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

BLOG COMMENTS POWERED BY DISQUS