தஞ்சோங் பூங்கா மண்சரிவு: மாநில அரசை குறைகூறியது சுற்றுச் சூழல் அமைச்சு!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், அக்.23- இங்குள்ள தஞ்சோங் பூங்கா கட்டுமானத் திட்டப் பகுதியை ஒட்டி கிரைனைட் கல் குவாரி அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என தாமான்ஶ்ரீ பூங்கா நிறுவனத்தின் மேம்பாட்டு விண்ணப்பத்தை தாங்கள் நிராகரித்ததாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது. 

"1960-ஆம் ஆண்டு முதற்கொண்டு, தெக் கிரைனைட் குவாரி நிறுவனம் அப்பகுதிக்கு அருகில் கல்லுடைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் கட்டுமான மேம்பாட்டு பணிகள் குவாரியின் அருகில் மேற்கொள்ளப்படும் என்றறிந்து அந்த விண்ணப்பத்தை நாங்கள் நிராகரித்து விட்டோம்" என்று அவ்வமைச்சு அறிக்கை ஒன்றில் வாயிலாக தெரிவித்துள்ளது. 

2015-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதியன்று, தாமான்ஶ்ரீ பூங்கா கட்டுமான நிறுவனம், அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், ஒரு மாதக் காலத்தில் அந்த விண்ணப்பத்தை அமைச்சு நிராகரித்ததாக அது தெரிவித்தது.

அந்தக் கல் குவாரியில் மாதத்திற்கு இருமுறை கல் உடைப்புகள் நடத்தப்படுகின்றன. அக்டோபர் 9-ஆம் தேதியன்று அங்கு கல் உடைப்பு நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிட்த்தக்கது. 

"மலைப்பகுதிகளில் உடைக்கப்படும் அந்தக் கற்கள், அதன் பின்னர், மண்சரிவு நிகழ்ந்த இடத்திற்கு அருகாமையிலுள்ள குவாரி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, கட்டுமான பணிகளுக்காக சிறு சிறு கற்களாக உடைக்கப்படும்" என்று அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டிருந்தது. 

ஆனால், விண்ணப்பிக்கப்பட்ட அந்த குடியிருப்பு பகுதிக்கும் குவாரிக்கும் போதுமான இடைவெளி இல்லை. அந்தக் காரணத்தின் அடிப்படையில் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு சொன்னது. 

"அப்பகுதி, குடியிருப்புக்கு ஏற்புடையதாக இல்லை" என்று அந்த அறிக்கை அறிவுறுத்தியது. 

அந்தக் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் செங்குத்தான சரிவுப் பகுதிகளில் நடப்பதால், அந்த இடத்தைச் சுற்றுச்சூழல் பாதிப்பு மீதான மதிப்பீட்டுச் சோதனைக்கும் உட்படுத்த வேண்டும். 

"நாங்கள் நிராகரித்ததையும் பொருட்படுத்தாது அவர்கள் அந்தக் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் இச்செயலால், 9 பேர் இறந்து விட்டனர்" என்று அவ்வமைச்சு கூறியது. 

அதுமட்டுமல்லாது, இத்தகைய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் தக்க சோதனைகளை நிகழ்த்த பினாங்கு மாநில அரசாங்கம் தவறி விட்டதாகவும் அந்த அமைச்சு குறைப்பட்டுக் கொண்டது. 

இனிமேல் கொண்டு, மலைப்பகுதிகளில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை மாநில அரசாங்கம் முறையாக கண்காணிக்க வேண்டும் எனவும் அது கேட்டுக் கொண்டது. 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS