முதியோர் பராமரிப்பு இல்லங்களை  சீர்படுத்தும் மசோதா தாக்கல்!

சமூகம்
Typography

 கோலாலம்பூர், அக்.23- 2017-ஆம் ஆண்டின் தனியாரின் முதியோர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சுகாதாரச் சேவைகளைச் சீர்படுத்தும் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மசோதாவை சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தாக்கல் செய்தார். இந்த மசோதா எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த மசோதா அமலுக்கு வந்தால், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களை பராமரிக்கும் இல்லங்களில் 4 பேருக்கு மேல் பராமரிக்கப் பட்டால், அந்த இல்லங்கள், சுகாதார அமைச்சின் இயக்குனரிடமிருந்து அவற்றை நடத்துவதற்கான உரிமத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

அந்த இல்லங்களில் வழங்கப்படும் பராமரிப்புச் சேவைகள் நன்றாக கண்காணிக்கப்பட்ட பின்னரே, அவர்களுக்கு உரிமங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூன்று வருட காலச் சேவைக்கு மட்டுமே அந்த உரிமம் வழங்கப்படும். இந்த மூன்று வருட கால அவகாசத்தின் போது, அந்த இல்லங்கள் வேறு ஒருவருக்கு கைமாற்றப்படக் கூடாது. சுகாதார அமைச்சின் இயக்குநர் ஒப்புக்கொண்டால் மட்டுமே, அது சாத்தியமாகும். 

அதுமட்டுமல்லாது, இந்த இல்லங்களின் ஊழியர்கள், அவசர கால அடிப்படை முதலுதவி சிக்கிச்சை வழங்குவது எப்படி? என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

அங்கு பராமரிப்பில் வைக்கப்படுவோரின் பாதுகாப்பு குறித்த பாதுகாப்புக் கொள்கை அறிக்கை ஒன்றையும் அந்த இல்லங்கள் அம்முதியோரின் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும். 

அந்த இல்லங்கள் பராமரிப்பில் வைக்கப்படும் முதியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, இந்த அம்சம் அந்த மசோதாவில் இணைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உரிமம் வழங்கப்பட்ட இந்த இல்லங்களுக்கு அதிகாரிகள் திடிர்ச் சோதனைகளை மேற்கொள்வர். ஓர் இல்லத்தின் உரிமத்தை ரத்து செய்யும் அல்லது அந்தப் பராமரிப்பு இல்லத்தை இழுத்து மூடும் அதிகாரம் சுகாதார அமைச்சின் இயக்குனருக்கு உண்டு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

தங்களின் பராமரிப்பு இல்லங்களை மூடுவதற்கு முனையும் உரிமையாளர்கள், பராமரிப்பாளர்கள், சுகாதார அமைச்சின் இயக்குனருக்கு மூன்று மாதக் கால நோட்டிஸ் வழங்க வேண்டும். 

1993-ஆம் ஆண்டின் பரமாரிப்பு இல்லச் சட்டத் திட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப அமையுமேயானால். 60 வயதுக்கும் குறைவானவர்களையும் இந்த இல்லங்களில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS