400-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பள்ளிகளிலிருந்து நீக்கம்! -அமைச்சர்

சமூகம்
Typography

கோலாலம்பூர், அக்.23- இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து ஒழுங்கின்மை காரணமாக 442 இடைநிலை மாணவர்கள் பள்ளிகளை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில்  கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ மட்ஷீர் காலிட் கூறினார்.

நாட்டிலுள்ள 2,400 இடைநிலைப் பள்ளிகளிலிருந்து 442 மாணவர்கள்ஒழுங்கின்மை காரணமாக பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாட்டில் மொத்தம் 5.1 மில்லியன் ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்த எண்ணிக்கையை கணக்கெடுக்கையில், பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக அவர் சொன்னார். ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு முதலில் ஆலோசனைகள் வழங்கப்படும். 

அதனை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல், மீண்டும் தகாத செயல்களில் ஈடுபடும் போது தான் அவர்கள் பள்ளிகளிலிருந்து நீக்கப் படுகின்றனர் என்று அவர் கூறினார். 

குண்டர் கும்பல், பகடிவதைச் சம்பவங்கள், போதைப் பொருள் உபயோகம், பள்ளிக்கு மட்டம் போடும் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள்தான் பள்ளிகளிலிருந்து நீக்கப்படுவதாக அவர் சொன்னார். 

ஒழுங்கற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை திருத்தும் பொருட்டு அவர்களை சிறைச்சாலைகளுக்கு அனுப்புவது குறித்து கல்வி அமைச்சு யோசித்து வருவதாக மட்ஷீர் கருத்து தெரிவித்தார். 

"பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இது குறித்து கலந்தாலோசித்து வருகிறோம். அதே வேளையில், சிறைச்சாலை இலாகாவுடனும் கல்வி அமைச்சு இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது" என்றார் அவர். 

குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் எட்டு சிறைச்சாலைகளிலும் 4 சீர்திருத்த பள்ளிகளிலும் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் 640 மாணவர்கள் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்றார் அவர். 

இதனிடையே, குற்றச்செயல்கள் மற்றும் ஒழுங்கின்மை நடவடிக்கைகள் அதிகமாக நிகழும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற இடங்கள் கண்டறியப் பட்டுள்ளதாக அவர் சொன்னார். 

ஒரு மாணவனின் நடவடிக்கைகள், அவனைச் சார்ந்தோர் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்துத்தான் அமைகிறது என்று கல்வி அமைச்சர் மட்ஷீர் கருத்துரைத்தார்.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS