எரிபொருள் விலையேற்றம்: அரசாங்கம் கவனமாகச் செயல்பட வேண்டும்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், நவ.24- பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு 2 ரிங்கிட் 50 காசுகள் அல்லது அதற்கும் மேல் ஏற்றம் கண்டு, நடைமுறையில் இருந்தால், அரசாங்கம் பல சங்கடங்களையும் சவால்களையும் எதிர்கொள்ளக் கூடும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அப்துல் ரஹ்மான் டாலான் கூறினார். 

ஒரே மலேசியா பிரீம் உதவித் தொகையை (BR1M) அதிகரித்தாலும் கூட, இந்த எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்கள் அவதியுறுவர் என்று அப்துல் ரஹ்மான் கருத்து தெரிவித்தார். 

"ஒவ்வொரு வாரமும் உலகச் சந்தையைப் பொருத்தே பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் என்று மதிப்பீட்டு நிறுவனங்கள் முடிவெடுத்திருக்கையில், அந்த விலையை மலேசிய அரசாங்கம் நிலைப்படுத்த நினைத்தால், அவர்களின் செயல்பாட்டில் அரசாங்கம் தலையிடுகிறது என்று அவர்கள் நினைக்கக்கூடும். 

"ஆதலால், அரசாங்கம் கவனமாக செயல்பட வேண்டும்" என்று பெட்ரோல் விலை ஏற்றம் அல்லது குறைப்பில் அரசாங்கத்தின் பங்கு குறித்து கோலா சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ டாக்டர் இர்மொஹிசாம் இப்ராஹிமின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் அவ்வாறு கூறினார். 

இதனிடையே, பெட்ரோல் விலை ஏற்றத்தை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, அரசாங்கத்தை குறை கூறும் எதிர்கட்சியின் செயலை அப்துல் ரஹ்மான் சாடினார். பெட்ரோல் விலை குறையும் போது, அது குறித்து எதிர்கட்சியினர் ஏதும் கருத்துரைப்பதில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

வார முறையில் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் என்று அரசாங்கம் மார்ச்சு மாதத்தின் போது முடிவெடுத்ததாகவும், அப்போதிலிருந்து இதுவரை எரிபொருள் விலை 1 காசு மட்டுமே ஏறியதாக அவர் தெரிவித்துக் கொண்டார். 

"கடந்த 21 வாரங்களாக பெட்ரோல் விலை 83 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. 13 வாரங்களுக்கு அதன் விலை 82 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இக்காலக்கட்டத்தில் பெட்ரோல் விலை 1 காசு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது" என்றார் அவர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS