போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை! மசோதா தாக்கல்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், நவ.24- போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு விதிக்கப்படும் மரணத் தண்டனையானது ஒழிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உத்தேச மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

1952-ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தில் (சட்டம் 234), திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  1983-ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆண்டுகளில், இக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. அந்தச் சட்டத்திட்டம் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1975-ஆம் ஆண்டில், சட்டம் 234 கீழ் திருத்தங்கள் செய்யப்பட்டப் பின்னர், இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவருக்கு போதைப்பொருள் குற்றம் 39B-யின் கீழ், கட்டாய மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையில், சட்டம் 234-யின், 39B (2) துணைப்பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. ஒருவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்படலாமா அல்லது ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கலாமா என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும். மேலும், அக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 15 பிரம்படிகளுக்கும் குறைவாக விதிக்கப்படக்கூடாது என்பதே அந்தத் திருத்தமாகும். 

மரணத் தண்டனையை விதிக்கலாமா வேண்டாமா என்ற அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழங்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலீனா ஒத்மான் சாயிட் கூறினார். 

இருந்தபோதிலும், நீதிமன்றத்தின் "சமயோசித" அதிகாரம், சில சூழ்நிலைகளுக்கு கட்டுப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துக் கொண்டார். 

இக்குற்றத்தின் பேரில், ஒருவர் கைது செய்யப்படும் போது, அவர் போதைப்பொருளை வாங்கவோ அல்லது விற்கவோ முயற்சி செய்யாதிருந்தால், எந்த முகவரின் ஈடுபாடும் இல்லாமல் இருந்தால், அல்லது அந்தப் போதைப்பொருளை வேறொரு இடத்திற்கு கொண்டுச் சேர்ப்பதற்காக மட்டுமே அவற்றை அவர் கையிருப்பில் வைத்திருந்தால் என்ற அடிப்படையில், நீதிமன்றத்தின் சமயோசித அதிகாரம் செயல்படும். 

சிலருக்கு நியாயமற்ற மரண தண்டனையை விதிக்கப்படுவதை தடுப்பதற்காக அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டப் போதிலும், நிஜமாகவே போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத் தண்டனையை வழங்குவதில் அரசாங்கம் எந்தத் தயக்கமும் கொள்ளாது என்று அஸாலீனா தெரிவித்துக் கொண்டார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS