சாக்லெட் கொடுத்து அண்டை வீட்டுச் சிறுமிகளை கற்பழித்த காமுகன் கைது!

சமூகம்
Typography

 

குவாந்தான், நவ.24- "என்னுடன் வா, சாக்லெட் தருகிறேன்" என்று கூறி, தனது அண்டை வீட்டாரின் இரு பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற, அதன் பின்னர் அவர்களை கற்பழித்த ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த 6-ஆம் தேதியன்று, ஜாலான் கம்பாங்கிலுள்ள தனது அண்டை வீட்டாரின் 8 வயது மகளிடம், சாக்லெட்டுகளை காண்பித்து, அந்தக் கிராமத்தைச் சுற்றிப் பார்க்க தன்னுடன் வருமாறு, 25 வயது ஆடவன் கூப்பிட்டுள்ளான். 

அந்தச் சிறுமியும், அவனுடன் அவனின் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றாள். தாமான் மக்கோத்தா அமான் என்ற பகுதியிலுள்ள தண்ணீர் டாங்கி அருகில் அச்சிறுமியை அழைத்துச் சென்று, அவன் கற்பழித்துள்ளான் என்று குவாந்தான் போலீஸ் தலைவர் துணை ஆணையர் அப்துல் அஸிஸ் சாலே தெரிவித்தார். 

அதேபோன்று, அந்தச் சிறுமியின் ஆறு வயது சகோதரியிடமும் சாக்லெட்டுகள் மற்றும் பணத்தைக் கொடுத்து, தன்னுடன் ஊரைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்று, அருகிலுள்ள செம்பனைத் தோட்டத்தில் அவளை அந்த ஆடவன் கற்பழித்துள்ளான் என்று துணை ஆணையர் அப்துல் அஸிஸ் கூறினார். 

அவர்களை கற்பழித்தப் பின்னர், ஒன்றுமே நடக்காதது போல், அச்சிறுமிகளை அவர்களின் வீட்டில் அவன் இறக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சிறுமிகள், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக ஜெயா காடிங் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தொடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து, கடந்த 8-ஆம் தேதியன்று லோரி உதவியாளரான அந்த ஆடவனை குற்ற விசாரணைப் பிரிவு அவனது வீட்டில் கைது செய்தது என்று அப்துல் அஸிஸ் சொன்னார். 

அந்த ஆடவன் இதற்கு முன் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பது முதற்கட்ட விசாரணை வாயிலாக தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.

அந்த ஆடவனை போலீசார் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், அவன் எவ்வித போதைப்பொருளையும் உட்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம், குற்றவியல் சட்டம் 376 ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS