‘மலேசியாவில் ஜல்லிக்கட்டு -2018’ சென்னையில் தொடக்க நிகழ்வு -(VIDEO)

சமூகம்
Typography

 கோலாலம்பூர், டிச.6- இவ்வாண்டு மலேசியாவில் பொங்கல் திருநாள் மலேசியர்களின் வரலாற்றில் ஒரு புதிய முத்திரையைப் பதிக்கவிருக்கிறது. பொங்கலை முன்னிட்டு மலேசியாவில் முதன் முறையாக தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

நமது தொன்மைய காலம் தொட்டு நம்மைச் சுற்றி நிகழ்ந்துவரும் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும். இன்னமும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு புதிய எழுச்சியுடன் நடந்து வருகிறது.

அந்தப் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தொடர்ந்து நிலைநிறுத்தி, பாதுகாத்துப் பேணும் நம்பிக்கையுடன் மலேசியாவில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வரலாறு படைக்கிறது ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம்.

ஜனவரி மாதம் 7ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் சிலாங்கூர் டர்ப் கிளப்பில் (Selangor Turf Club) ‘மலேசியாவில் ஜல்லிக்கட்டு- 2018’ போட்டி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி ‘ஆஸ்ட்ரோ உலக’த்தில் நேரலை செய்யப்படவுள்ளது.

மலேசியாவில் ஜல்லிக் கட்டு நடத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்ச்சி ஒன்று நவம்பர் 30 ஆம் தேதி சென்னையில் சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடந்த தொடக்கவிழாவின் போது தமிழக  தமிழ் மொழி, கலாசார மற்றும் தொல் ஆய்வுத்துறை அமைச்சர் பாண்டியராஜன்  ‘மலேசியாவில் ஜல்லிக்கட்டு-2018’ போட்டி நிகழ்வுக்கான சின்னத்தை திறந்து வைத்தார்.

தமிழ் மக்களின் அடிநாதமாக விளங்கும் கலைகளில் ஒன்று ஜல்லிக்கட்டு என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் நிர்வாகக் குழும இயக்குனர் டாக்டர் ராஜாமணி இந்நிகழ்வின் போது  ஜல்லிக்கட்டை  மலேசியாவில் முதன் முறையாக நடத்தும் திட்டம் குறித்து விளக்கினார்.

சென்னையில் நடக்கும் தொடக்க நிகழ்வுக்கு  தலைமை வகிக்க   அமைச்சர் பாண்டியராஜன் அவர்களை அழைக்க நாங்கள் முடிவு செய்ததற்கு காரணம், கிராமக் கலைகள் மீது அதிகப் பற்றுக் கொண்டு வளர்த்து வருபவர் என்பதால் இதற்கு பொருத்தமானவர் என்று கருதினோம் என்று டாக்டர் ராஜாமணி குறிப்பிட்டார்.   

உலகறிந்த பேச்சாளரும் பேராசிரியருமான முனைவர் ஞானசம்பந்தன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

தமிழகத்திலேயே ஜல்லிக்கட்டு நடக்குமா?நடக்காதா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் ஜல்லிக்கட்டை கடல் தாண்டி கொண்டு செல்லும் பெருமையை ஆஸ்ட்ரோ இப்போது நமக்கு வழங்கி இருக்கிறது என்று ஞானசம்பந்தம் தெரிவித்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS