பகடிவதைக் கொலை; நவீன் வழக்கு  ஜனவரி 11ஆம் தேதி விசாரிக்கப்படும்!

சமூகம்
Typography

 ஜார்ஜ்டவுன், டிச.6- பகடிவதை காரணமாக கொலை செய்யப்பட்ட டி.நவீன் சம்பந்தப்பட்ட வழக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 11ஆம்தேதி நடைபெறும் என்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது.

இராசாயன அறிக்கைக்காக தாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருப்பதாக அரசு தரப்பு துணை பிராசிகியூட்டர் முகம்மட் ஷாஃபிக் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முகம்மட் அமின் ஷாகுல் ஜனவரி 11ஆம் தேதியை நிர்ணயம் செய்தார்.

நீதிமன்றத்தினுள் நவீனின் பெற்றோர்கள் மற்றும்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களின் பெற்றோர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டனர்.

இந்தத் தருணத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவரின் உறவினர் போலீஸ்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் அமளியை ஏற்படுத்தினார்.

இராசாயன அறிக்கையைப் பெறுவதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து தாங்கள் பெரிதும் அதிருப்தி அடைந்திருப்பதாக நவீனின் வழக்கறிஞரான டத்தோ பல்ஜிட் சிங் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த இராசாயன அறிக்கையைப் பெறுவதில் பிராசிகியூசன் தரப்புக்கு இவ்வளவு காலதாமதம் எதனால் ஏற்படுகிறது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நவீன் கொலை வழக்கில் ஜே.ராகேஸ்சுதன் (வயது 18),எஸ்.கோகுலன் (வயது 18), மற்றும் 16வயது 17 வயது சிறுவர்கள் இருவர் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் அதாவது கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS