சிறார் பாலியல்: ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு நீதிமன்றம்!! 

சமூகம்
Typography

புத்ராஜெயா, டிச.11- சிறார்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் வழக்குகளை விசாரிக்க ஏதுவான சிறப்பு நீதிமன்றம், ஒவ்வொரு மாநிலங்களிலும் அடுத்த வருட இறுதிக்குள் இடம்பெறும் என்று மலேசிய கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் டத்தோஶ்ரீ லத்திஃபா முகமட் தாஹார் கூறினார். 

சிறார்கள் மீதான பாலியல் வன்முறை குற்றங்களை விசாரிக்கும் பொருட்டு, 12 சிறப்பு நீதிமன்றங்கள் 2018-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று லத்திஃபா மேலும் கூறினார். இக்குற்றங்களை விசாரிக்க மலேசியாவில் இப்போதைக்கு ஒரே ஒரு நீதிமன்றம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

புத்ரா ஜெயாவிலுள்ள இந்தச் சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் செயல்பட ஆரம்பித்ததாகவும், அதனைத் தொடர்ந்து, அந்நீதிமன்றத்தில் சிறார்கள் பாலியல் வன்முறை குறித்தான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.   

"மக்கள் மத்தியில் சிறார்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு பாலியல் தொல்லைகள் தருபவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன" என்று லத்திஃபா சொன்னார். 

இதனிடையில், சிறார்களை இவ்வாறான குற்றச்செயல்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, நிரந்தர செயல்பாட்டு விதிமுறை ஒன்றினை பிரதமர் துறை அமைச்சர் எதிர்வரும் புதன்கிழமையன்று அறிவிப்பு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களை, அந்தக் கொடூரச் சம்பவத்திலிருந்து விடுபடச் செய்யும் பொருட்டு, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது மற்றும் அவர்களுக்கு ஆதரவு சேவைகள் வழங்குவது குறித்து இந்த விதிமுறையில் தெளிவுப் படுத்தப்படும். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS