விபத்து; பேரா ஆட்சிக்குழு உறுப்பினரின்  உதவியாளர் உட்பட மூவர் பலி!

சமூகம்
Typography

ஈப்போ, டிச.13- ஜாலான் போத்தா கானான்–தெலுக் இந்தான் சாலையில்  கார் ஒன்று, லோரி ஒன்றின் மீது மோதிய விபத்தொன்றில், பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இன்று காலை 6 மணிக்கு நிகழ்ந்த அவ்விபத்தில் 35 வயதான அகமட் நோர் அல்-ஸாய்டின், அவரின் மனைவி நோர்ஹஸ்லீனா (வயது 27) மற்றும் நோர் அஸிரா என்ற அவரின் தங்கை ஆகியோர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர் என்று பேராக் தெஙா ஓசிபிடி சூப்ரிண்ட். முகமட் ஸைனால் அப்துல்லா கூறினார். 

இச்சம்பவத்தில் இறந்த அகமட் நோர், பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸைனூல் ஃபாட்ஸியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அம்மூவரும், கம்போங் காஜாவிலிருந்து தெலுக் இந்தானை நோக்கிச் செல்லும் வழியில் இவ்விபத்து நிகழ்ந்தது. அகமட் நோர் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாதையில் வந்து கொண்டிருந்த லோரி மீது மோதியது. அதனைத் தொடர்ந்து, இவ்விரு வாகனங்களும் அருகிலிருந்த கால்வாயில் விழுந்ததாக முகமட் ஸைனால் தெரிவித்தனர்.

அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சங்காட் மெலிந்தாங் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளன. விசாரணைக்கு உதவும் பொருட்டு, 25 வயதான லோரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS