லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிக்கு 20 நாட்கள் சிறை!

சமூகம்
Typography

கூச்சிங், ஜன.11- ஒரு காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை, அந்த நகை உரிமையாளரிடம் திருப்பித் தர வேண்டுமானால், தனக்கு அந்தப் பெண், 5,000 ரிங்கிட் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 20 நாட்கள் சிறைத் தண்டனையும் 25,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. 

கடந்த 2015-ஆம் ஆண்டில், மார்சு மாதம் 13-ஆம் தேதியன்று, போதைப்பொருள் குற்றத்திற்காக ஏமி இப் சூ லிங் என்ற பெண்மணியின் கணவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அந்த ஆடவரின் காருக்குள், ஏமியின் நகைகள் இருந்ததால், அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  

தனது நகைகளை தன்னிடம் திருப்பித் தருமாறு போலீசாரிடம் ஏமி கேட்டுக் கொண்ட போது, நகைகள் திரும்ப வேண்டும் என்றால், 5,000 ரிங்கிட் லஞ்சம் கொடுக்கப்பட வேண்டும் என்று 35 வயதான போலீஸ் அதிகாரியான அஸ்ரூல் இஸ்மான் ஷாடான் கூறினார். அதனைத் தொடர்ந்து, சிபுவிலுள்ள தங்கும் விடுதியில், ஏமி அஸ்ரூலிடம் 5,000 ரிங்கிட்டை வழங்கி, தனது நகைகளைப் பெற்றுக் கொண்டார். 

அதன் பின்னர் ஏமி இது குறித்து மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் புகார் கொடுத்தார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதியன்று, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து அஸ்ரூல் மேல் விசாரணை கோரினார். 

ஆனால், அவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது, அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அஸ்ரூல் இதுவரை இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபட்டதில்லை என்பதைச் சுட்டிக் காட்டி, அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் ஃபாஸீலா ஒத்மான் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS