குடியுரிமை இல்லாமல் தவித்த டர்ஷனா; பள்ளிச் செல்ல வாய்ப்பு!

சமூகம்
Typography

சிரம்பான், ஜன.11- பிறப்புப் பத்திரத்தில் 'மலேசிய குடிமகள் இல்லை' என்று எழுதப்பட்டதால், பள்ளித் தவணைத் தொடங்கியும் பள்ளிக்கு செல்ல முடியாமல் ஏங்கிக் கொண்டிருந்த க.டர்ஷனாவிற்கு பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

டர்ஷனாவைப் போன்றே குடியுரிமை இல்லாத காரணத்தால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கும், கல்வி அறிவை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் துறையின் சிறப்பு அமலாக்கப் பணிக்குழுவின் நிர்வாகி ஜி.கே.ஆனந்தன் கூறினார். 

"இப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வினை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இதனை அமலுக்கு கொண்டு வர சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. குடிநுழைவுத் துறை, தேசிய பதிவு இலாகா மற்றும் கல்வி இலாகா ஆகிய இலாகாக்களும் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று ஆனந்தன் சொன்னார். 

இதனிடையில், மலேசியாவில் வசிக்கும் அனைத்து சிறாருக்கும் அடிப்படை கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் கல்வி அமைச்சு முழுக் கவனம் செலுத்தி வருகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் சிறப்பு அதிகாரியுமான அவர் தெரிவித்தார். 

பி.கணேசன் மற்றும் வி.மல்லிகா தம்பதியினரின் தத்துப் பிள்ளையான க.டர்ஷனாவின் பிறப்புப் பத்திரத்தில், அவர் இந்நாட்டு பிரஜை அல்ல என்று குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, அவரை பள்ளியில் சேர்த்துக் கொள்ள பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. 

அவ்விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ மஹாட்ஸீர் காலீட்டிடம், கல்வி அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் குறைப்பட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, இவ்வாறான பிரச்சனைகளை எதிர்நோக்கும் பிள்ளைகள் அரசாங்க கல்விக் கூடங்களில் பதிந்துக் கொள்ள சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று டத்தோஶ்ரீ மஹாட்ஸீர் கூறியதாக, ஆனந்தன் தகவல் தெரிவித்தார். 

குடியுரிமை இல்லாத பிள்ளைகளைப் பள்ளிகளில் பதியச் செய்ய முடியாது என்று அண்மையில் குடிநுழைவுத் துறை புதிய விதிமுறை ஒன்றை விதித்துள்ளது. குடியுரிமை இல்லாத பிள்ளைகள், பாஸ்போர்ட்/கடப்பிதழ் வைத்திருந்தால் மட்டுமே பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்த விதிமுறை கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி முதற்கொண்டு நடைமுறையில் உள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த பலர், டர்ஷனாவை பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகாவில், ஆனந்தன் டர்ஷனாவை பதிவுச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS