போலீஸ் காவலில் மரணமடைந்த சந்திரன்; மேல் முறையீடு செய்ய அரசுக்கு அனுமதி!

சமூகம்
Typography

புத்ராஜெயா, ஜன.11- கடந்த 2012-ஆம் ஆண்டில், டாங் வாங்கியிலுள்ள காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பி.சந்திரன் என்ற லோரி ஓட்டுநர், அந்தத் தடுப்பு காவலின் போது மரணமடைந்தது தொடர்பில் மேல் முறையீடு செய்ய அரசாங்கத்திற்கும் 6 போலீஸ்காரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

1956-ஆம் ஆண்டின் பொதுச் சட்டத்தின் 8(2) பிரிவு குறித்து கேள்வி எழுப்ப தேசிய போலீஸ் படைத் தலைவர் மற்றும் 5 போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

இதன் தொடர்பில், வாதி பிரதிவாதி ஆகிய தரப்புகளின் வாதத்தை மூவர் அடங்கிய நீதிபதி குழு செவிமடுத்து, அதன் பின்னர், அரசாங்கம் மற்றும் அந்த 6 போலீஸ்காரர்களுக்கும் மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியை அவர்கள் வழங்கினர். 

டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்திரன் நோய்வாய்ப்பட்டிருந்த வேளையில், அவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையை வழங்காத காரணத்தால், சந்திரன் தடுப்புக் காவலில் மரணமுற்றார். அதனைத் தொடர்ந்து, மனிதநேயம் மறுக்கப்பட்ட சந்திரனுக்கு நியாயம் பெற்றுத் தரும் பொருட்டு, அரசாங்கம் மற்றும் அவரின் மரணத்திற்கு காரணமான போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் படைத் தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

கடந்த 9-ஆம் தேதியன்று, சந்திரனின் மரணத்திற்கு போலீசார் பொறுப்பேற்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சந்திரனின் மனைவிக்கு, 357,500 ரிங்கிட்டும், அவரின் மகளுக்கு 200,000 ரிங்கிட்டையும் சம்பந்தப்பட்டவர்கள் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு விதிக்கப்பட்டது. 

சந்திரனின் மரணத்திற்கு பொறுப்பேற்க அரசாங்கம் தயார் என்ற போதிலும், அவ்வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அரசாங்கம் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS