போலீஸுக்கு லஞ்சம்; உமா மகேஸ்வரனுக்குச் சிறை, அபராதம்! 

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.23-  வாகன உரிமம் இல்லாமல் வேன் ஒன்றை ஓட்டிச் சென்ற ஶ்ரீ லங்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்திய போலீசாருக்கு 150 ரிங்கிட்டை லஞ்சமாகக் கொடுக்க முயற்சித்த அந்த ஆடவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை மற்றும் 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 

உ.உமா மகேஸ்வரன் என்ற அந்த ஶ்ரீ லங்கா இளைஞர், தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டஸூகி அலி தெரிவித்தார். 

கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதியன்று, வாகன உரிமம் இல்லாமல், வேனை ஓட்டிச் சென்ற உமா மகேஸ்வரனை முகமட் நோர் அஸ்மான் என்ற போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார். அப்போது, தன்னிடமிருந்த 150 ரிங்கிட்டை அவரிடம் கொடுத்து, தன்னை விடுவிக்குமாறு உமா மகேஸ்வரன் கேட்டுக் கொண்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

விதிக்கப்பட்ட அபராதத் தொகையை உமா மகேஸ்வரன் செலுத்தத் தவறினால், அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 

தாம் ஶ்ரீ லங்கா நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மலேசிய சட்டத்திட்டம் குறித்து அறிந்திராமல், தாம் அத்தவறை புரிந்து விட்டதாக உமா மகேஸ்வரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தமது தவறை உணர்ந்து தாம் மன்னிப்பு கோருவதாகவும், தமக்கான தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தற்போது தாம் வேலையில்லாமல் இருப்பதாகவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS