ஆயுதப்படையில் இந்தியர்களைச் சேர்க்கும் முயற்சிகள் தொடரும்! -டத்தோ முருகையா -(Video)

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.23-  மலேசிய இந்திய இளைஞர்களை ஆயுதப் படையில் கூடுதலான அளவில் சேர்க்கும் முயற்சியாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஐந்நூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதோடு, படையில் சேர்வதற்கான விண்ணப்பங்களை 275 பேர் சமர்ப்பித்தனர்.

முன்னாள் துணையமைச்சர் டத்தோ டி.முருகையா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பெரிம் (perim) எனப்படும் முன்னாள் இந்திய முப்படை வீரர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள இப்ராகிம் யாக்கோப் தேசிய இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் இந்நிகழ்ச்சிக்கு  கூட்டரசுப் பிரதேச பெரிம் அமைப்பின் தலைவரான  குணசேகரன் ஏற்பாடு  செய்திருந்தார். 

அரசுச் சேவைத்துறையில் இந்தியர்களின் பங்கேற்பை 7 விழுக்காடு அளவுக்கு உயர்த்த எடுக்கப்பட்டிருக்கும் முயற்சியின் ஒருபகுதியாக ஆயுதப் படையில் இந்திய இளைஞர்களைச் சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக டத்தோ டி. முருகையா தமது உரையின் போது  குறிப்பிட்டார்.

ஆயுதப் படையில் இந்தியர்கள் அதிக அளவில் சேர வேண்டியதன் அவசியம் குறித்து  விளக்கிய அவர்,  இந்த முயற்சிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், நாடு தழுவிய அளவில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஆயுதப்படையில் முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்புகள் இருப்பதை ஆயுதப்படை மனித வளத்துறையின் இயக்குனரான பிரிக்கேடியர் ஜெனரல் திருமதி சூரியகலா விளக்கினார்.

மேலும், இராணுவத்தில் சேர விரும்பும் நமது இளைஞர்களுக்கான விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் அதன் பயன்கள் ஆகியவை குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் போது 275 இந்தியர்கள், ஆயுதப்படையின் பல்வேறு பிரிவுகளில்  சேர்வதற்கான தங்களின்  விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். இவர்களில் 57 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS