இந்தியத் தம்பதியர் கடத்தப்பட்டனரா? காணாமல் போனதன் மர்மம் என்ன? 

சமூகம்
Typography

காஜாங், ஜன.23- கடந்த சில வாரங்களாக மிரட்டலுக்கு ஆளாகிய இந்தியத் தம்பதியர் திடீரென்று காணாமல் போனதன் மர்மம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவ்விருவரும் செலாயாங் என்ற பகுதியில் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

பலாக்கோங்கில் உணவகத்தை நடத்தி வரும் வி.மோகன் (வயது 35) மற்றும் அவரின் மனைவி, பி.வின்ஷினி (வயது 28) ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமையிலிருந்து காணவில்லை. அவ்விருவரும், அன்றைய தினத்தன்று தங்களின் உணவகத்தை பூட்டி விட்டு வெளியேறினர் செலாயாங்கில் உள்ள சந்தைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அச்சந்தையில் அதிகாலை 5 மணியளவில் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கையில் அவ்விருவரும் உறவினர் ஒருவரோடு கைத்தொலைபேசியில் பேசியுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் குறித்து எவ்வித தகவலும் யாருக்கும் தெரியவில்லை என்று மோகனின் உறவுக்காரரான கே.காளீஸ்வரன் கூறினார். 

WMS 411 என்ற நிஸ்ஸான் ரக வேனில் அவ்விருவரும் செலாயாங் சந்தைக்குச் சென்றதாக காளீஸ்வரன் தெரிவித்தார். 

"அவர்கள் கடத்தப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்தச் சந்தை அருகே அவர்களின் வேன் தென்படவில்லை. அன்றைய தினம் இரவு 10 மணி வரை வின்ஷினியின் கைத்தொலைபேசிக்கு நான் அழைப்பு விடுத்தேன். அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. சற்று நேரத்தில், அந்தக் கைப்பேசி முடக்கப்பட்டது" என்று அவர் சொன்னார். 

வின்ஷினியின் கைத்தொலைபேசி, இறுதியாக பேராக்கிலுள்ள கிரீக் என்ற பகுதியில் செயலில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கிரீக் பகுதியில் அவர்களை தேடும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டதாகவும், அவ்விருவரும் அங்கு காணப்படவில்லை என்றும் காளீஸ்வரன் கூறினார். 

காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னர், தங்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரில் பின்தொடர்வதாக உறவினர்களிடத்தில் அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"கடந்த சில வாரங்களாக தமக்கு அடையாளம் தெரியாத எண்களிலிருந்து அழைப்புகள் வருவதாகவும், அவர்கள் தம்மை மிரட்டுவதாகவும் மோகன் என்னிடம் கூறினார். அடையாளம் தெரியாத ஆள்தானே என்று அவர் அந்த நபரை சட்டைச் செய்யவில்லை" என்று காளீஸ்வரன் தொடர்ந்தார். 

வட்டி முதலைகள் இவர்களை கடத்தி இருக்கக்கூடுமா என்ற கேள்விக்கு, அந்த உணவகத்தை வழிநடத்துவதற்கு அவர்கள் யாரிடமிருந்தும் கடன் பெற்றுக் கொள்ளவில்லை என்று காளீஸ்வரன் தெளிவுப் படுத்தினார். 

அவ்விருவரும், ரவாங்கிலுள்ள வின்ஷினியின் பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு 6 வயதிலும், 10 வயதிலும் பிள்ளைகள் உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. போலீஸ் தலைமையகத்தில் இச்சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS