9 நாட்கள் நரக வாழ்க்கை; பூட்டிய வீட்டில் அடித்து உதைத்து, கற்பழிக்கப்பட்ட பெண்! 

சமூகம்
Typography

சிபு, ஜன.23- தனது காதலனால், அவனின் வீட்டின் அறையில் ஒன்பது நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மூன்று முறை கற்பழிக்கப்பட்ட 23 வயது பெண், அவனிடமிருந்து தப்பித்து, சிபுவிலுள்ள காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். 

அந்த 30 வயது ஆடவனுடன் கடந்த சில ஆண்டுகளாக காதல் வயப்பட்டிருந்த அந்தப் பெண், தனது காதலனுக்கு மற்றுமொரு முகம் இருப்பது குறித்து தாம் கடந்த 15-ஆம் தேதி வரை அறிந்திருக்கவில்லை என்று போலீஸ் புகாரில் கூறியுள்ளார். 

கடந்த 15-ஆம் தேதியன்று, ஜாலான் எம்பெலாம் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டின் அறையில், அந்த 23 வயது பெண்ணை அடைத்து வைத்து, தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு அவன் வற்புறுத்தியுள்ளான். அந்தப் பெண் அதற்கு ஒத்துழைக்காததால், அவரை அடித்து உதைத்து, அவரின் விருப்பத்திற்கு மாறாக அவரை அவன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளான். 

ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 முறையாவது தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு அந்த ஆடவன் தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்தால், அப்பெண்ணின் குடும்பத்தினரை தாம் தாக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்று அவன் மிரட்டியதாக அந்தப் பெண், தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார். 

அந்த 9 நாட்களும், அந்த ஆடவன் போதை மருந்துக்கு ஆளாகியிருந்தான் என்று தாம் சந்தேகிப்பதாக அந்தப் பெண் கூறினார். பாவாங் அஸ்ஸான் என்ற பகுதியிலுள்ள அந்தப் பெண்ணின் உறவுக்காரர் வீட்டிற்கு சென்று, கடன் வாங்கி வருமாறு அவன் பணித்ததாகவும், அதனைச் சாக்காக உபயோகித்து, தாம் அங்கிருந்து தப்பி போலீஸ் நிலையத்திற்கு வந்ததாக அந்தப் பெண் சொன்னார். 

அந்தப் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, அந்தச் சந்தேக நபர், இன்று அதிகாலை 1.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக சிபு மாவட்ட போலீஸ் துணை ஆணையர் ஸ்டேன்லீ ஜோனதன் கூறினார். 

கற்பழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அந்தப் பெண், சிபு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS