சிறுமி மானபங்கம்: தாயால் பிள்ளையை பராமரிக்க முடியுமா? சமூக நலப் பிரிவு ஆய்வு!

சமூகம்
Typography

சுங்கைப் பட்டாணி, ஜன.24- கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, கேளிக்கைச் சந்தை ஒன்றில், ஒரு ஆடவனால் மானபங்கம் செய்யப்பட்ட சிறுமியை முறையாக வளர்க்கும் ஆற்றல் அந்தச் சிறுமியின் தாயாருக்கு இருக்கின்றதா என்பதை கெடா மாநில சமூகநல இலாகா ஆராய்ந்துள்ளது. 

தங்களுக்கு அறிமுகமான ஆடவன் தானே என்ற அடிப்படையில், அந்தச் சிறுமியை கேளிக்கைச் சந்தைக்கு அவனுடன் அனுப்பி வைத்த அச்சிறுமியின் தாயாருக்கு அவளை பராமரிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்று சமூக வலைத்தளவாசிகள் பலர் கடிந்துக் கொண்ட நிலையில், அத்தாயாரின் ஆற்றல் குறித்து தாங்கள் அறிந்துக் கொள்ள முனைந்ததாக கெடா மாநில சமூகநல இலாகா இயக்குநர் அஸ்மி அப்துல் கரீம் கூறினார். 

"இத்தகைய காமூகனிடமிருந்து அந்தச் சிறுமியை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் அந்தத் தாயாரிடம் விளக்கினோம். அச்சிறுமியின் எதிர்காலத்திற்கு எவ்வித தீங்கும் நேர்ந்து விடக் கூடாது என்பதையும் நாங்கள் அவருக்கு அறிவுறுத்தினோம்" என்று அஸ்மி அப்துல் கரீம் சொன்னார். 

"அச்சிறுமி அவளின் தாயாருடன் ஒன்றாக இருப்பதே நல்லது என்று நாங்கள் தெரிந்துக் கொண்டோம். அவளின் தாயார் அவளை நன்றாகவே பாதுகாப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. வேறேதும் விபரீதம் நேர்ந்தால் மட்டுமே சமூக நல இலாகா அவ்விவகாரத்தில் தலையிடும்" என்று அவர் தெரிவித்தார். 

இதனிடையில், அச்சம்பத்தில் பாதிக்கப்பட்ட அச்சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு சமூகநல இலாகா உட்படுத்தியதாகவும், அவளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அஸ்மி அப்துல் கரீம் கூறினார். 

இச்சம்பவம் குறித்த ஆய்வறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, அதன் முடிவு கூடிய விரைவில் மகளிர், குடும்பம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டத்தோஶ்ரீ ரொஹானி அப்துல் கரீமிடம் அனுப்பி வைக்கப்படும்.  

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, கேளிக்கை சந்தையில், பலர் சூழ்ந்து இருக்கையில், அந்த ஆடவன் அச்சிறுமியை மானபங்கம் செய்தான். அவனின் அச்சேட்டைகளை, சமூக வலைதளவாசி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து அதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.

அன்றை நாள் இரவு, அந்த ஆடவன், மீண்டும் அந்தச் சிறுமியைத் தேடி அவளின் வீட்டிற்கு சென்றான். வலைத்தளங்களில் பகிரப் பட்ட அந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாயார், அந்த ஆடவனை சராமாரியாக திட்டி விட்டு, அச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS