உடல் உறுப்பு தானம் செய்த 220,000 பேரின் தனிநபர் விவரங்கள் அம்பலம்! 

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.24- உடல் உறுப்பு தானம் செய்வதற்காக தங்களைப் பதிந்துக் கொண்ட 220,000 பொதுமக்களின் தனிநபர் விவரங்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்கள், 'ஆன்லைனி'ல் வெளியிடப்பட்டுள்ளதாக Lowyat.net என்ற அகப்பக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. 

பொதுமக்களின் தனிநபர் விவரங்களை அவர்களின் அனுமதியின்றி வெளியிடுவதாக சந்தேகிக்கபடும் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள் மீது பொதுச் சேவை இலாகா விசாரணை நடத்த வேண்டும் என்று மலேசிய டிஜிட்டல் பொருளாதார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகமட் ஷா'ஹானி அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். 

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதியன்று, 220,000 மக்களின் தனிநபர் விவரங்கள் அடங்கிய கோப்பு ஒன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்துக் கொள்ள தங்களைப் பதிந்துக் கொண்ட மக்களின் மை-கார்டு எண்கள், வீட்டு முகவரி, கைத்தொலைப்பேசி எண்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் கைத்தொலைப்பேசி எண்கள் போன்ற விவரங்கள் அதில் வெளியிடப்பட்டுள்ளதாக Lowyat.net என்ற அகப்பக்கம் கூறியுள்ளது.  

"நாடு தழுவிய நிலையில் உள்ள பொது மருத்துவமனைகள் மற்றும் உடல் உறுப்பு மாற்றம் வள மையங்களால் கையெழுத்திடப்பட்ட குறிப்புகளும் அந்தக் கோப்பில் இடம் பெற்றுள்ளன. அதனைக் கருத்தில் கொள்ளுகையில், இவ்விவரங்கள் அனைத்தும் மத்திய தரவுத் தளத்திடமிருந்து (central database) பெறப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது" என்று Lowyat.net கூறியுள்ளது.  

பொதுமக்களின் தனிநபர் விவரங்கள் வெளியிடப்படுவதால், அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேரலாம் என்பதை சம்பந்தப்பட்ட நிறுவன்ங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று ஷா'ஹானி அப்துல்லா சொன்னார். 2010-ஆம் ஆண்டின் தனிநபர் விவரங்கள் பாதுகாப்புச் சட்டத்திற்கு புறம்பாக இந்தச் செயல்கள் அமைந்துள்ளன என்று அவர் கருத்து தெரிவித்தார். 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS