சுங்கத் துறை அதிகாரியின் 4 கார்களுக்கு தீவைப்பு! 

சமூகம்
Typography

புத்ராஜெயா, ஜன.24- மூத்த சுங்கத் துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் அவரின் நான்கு கார்களில் இரு கார்கள் முற்றாக சேதமடைந்தன. மேலும் இரு கார்கள் சேதத்திற்கு உள்ளாகியுள்ள பட்சத்தில், அச்சம்பவம் ஒரு சதிநாச வேலை என்று போலீசார் கண்டறிந்துள்ளனர். 

நேற்று அதிகாலை புத்ராஜெயா அரசாங்க அதிகாரிகள் தங்கும் வீடமைப்பு பகுதியில், அந்த அதிகாரியின் வீட்டின் முன்புறத்தில் திடீரென்று தீப்பற்றியது. சம்பவம் நிகழ்ந்த போது, நோர் அஸ்மான் மாட் ஜீன் என்ற அந்த அதிகாரி தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

அச்சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை வாயிலாக, அந்தத் தீயை யாரோ வேண்டுமென்றே மூட்டி இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  

"தீயில் முற்றாக சேதமடைந்த காரின் இயந்திர மூடி (bonnet) மீது சுத்தியல் ஒன்றையும், கீழே தீ வரவழைக்கும் லைட்டர் (lighter) எனப்படும் கருவியையும் நாங்கள் கண்டெடுத்துள்ளோம்" என்று புத்ராஜெயா ஓசிபிடி துணை ஆணையர் ரொஸ்லி ஹசான் கூறினார். 

குற்றவியல் சட்டத்தின் 435-ஆவது பிரிவின் கீழ், அச்சம்பவம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

"அதிகாலை 3.30 மணிக்கு நேர்ந்த அந்தத் தீச்சம்பவத்தில், அந்த அதிகாரியின் வீட்டின் முன்புறம் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கார்களில், தீ  வேகமாக பரவியுள்ளது" என்று ரொஸ்லி ஹசான் சொன்னார். 

தீயில் முற்றாக சேதமடைந்த கார்கள், தனது மனைவி மற்றும் மகளுக்குச் சொந்தமானவை என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS