தாரிணி கொலை: மரணதண்டனைச் சட்டத்தில்  குணசேகரன் மீது குற்றச்சாட்டு!

சமூகம்
Typography

பெட்டாலிங் ஜெயா, பிப்.13-  காருக்குள் தாரிணி என்ற பெண்ணை கொலை செய்த பின்னர் அவருடைய உடலை காரிலேயே எடுத்துக் கொண்டு டமான்சாரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்த ஒரு பாதுகாவலாளியான 37 வயதுடைய எம்.குணசேகரன் என்பவருக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இன்று நீதிமன்றத்தில் தனக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது தாம் அதனைப் புரிந்து கொண்டதாக காட்டும் வகையில் குணசேகரன் தலையை அசைத்தார்.

இவரிடம் வாக்குமூலம் எதனையும் நீதிமன்றம் பதிவுச் செய்யவில்லை. நீதிமன்றத்தில் பார்வையாளர்கள் இருக்கைப் பகுதியில் கொலையுண்ட தாரிணியின் மூத்த சகோதரியான குணவதியும் அவருடைய தந்தை  தேவராஜூம் அமர்ந்திருந்தனர்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் கோத்தா டமான்சாராவிலுள்ள ஜெயண்ட் பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் தாரிணி (வயது 35) என்ற தன்னுடைய காதலி என்று கூறப்படும் பெண்ணை கொலை செய்ததாக குணசேகரன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என நிருபணமானால், கட்டாய மரணதண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொலை செய்ததாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு ஏப்ரல் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும். கொலையுண்ட தாரிணியின் குடும்பத்தினர் சார்பில் இந்த  வழக்கை, வழக்கறிஞர் எம்.மனோகரன் கண்காணித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS