ஷாகிர் நாயக் விவகாரம்: அரசுக்கு எதிரான வேதமூர்த்தி வழக்கு தள்ளுபடி! -(video)

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.13- சர்ச்சைக்குரிய மத போதகரான ஷாகிர் நாயக்கிற்கு மலேசிய அரசாங்கம் ஆதரவு அளிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாக உள்ளது எனக் கூறி ஹிண்ட்ராப் தலைவர் வேத மூர்த்தியும் இதர 18 பேரும் தொடுத்த வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தியாவினால் தேடப்படும் ஷாகிர் நாயக்கிற்கு அரசாங்கம் இடம் கொடுத்து, நிரந்தர வசிப்பிட அந்தஸ்தையும் வழங்கி இருப்பதானது, மலேசியாவின் தேசியப் பாதுகாப்புக்கும் நல்லெண்ணத்திற்கும் கடும் மிரட்டலாக விளங்குகிறது எனக் கூறி அரசாங்கத்திற்கு எதிராக  வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஷாகிர் நாயக்கும் ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்காததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக சேம்பர்ஸில் நீதிபதி அஸீஷா நவாவி தீர்ப்புக் கூறினார் என வேத மூர்த்தியின் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகேசு தெரிவித்தார். 

மேலும், இந்த வழக்கிற்கான செலவு தொகையான 5,000 ரிங்கிட்டை தங்கள் தரப்பு அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். எனினும், இன்றைய தீர்ப்பை எதிர்த்து தாங்கள் மேல் முறையீடு செய்யவிர்ருப்பதாக வழக்கறிஞர் கார்த்திகேசு தெரிவித்தார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது மற்றும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதியுதவி அளித்தது ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் அனைத்துலக ரீதியில் ஷாகிர் நாயக்கை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS