இன்று பிப்.14- அன்புக்குரியவர்களே, மலரட்டும் இதயம்! ஒளிரட்டும் உலகம்!

சமூகம்
Typography

பிப்ரவரி 14-  உலகளாவிய  இதுவோர் இனிய நாள். இந்நாள் 'காதலர் தினம்' - 'வாலன்டைன் டே' அல்லது 'அன்புக்குரியவர் தினம்' என்ற  பல வடிவங்களில் உயிரோட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நவீன யுகத்தில், தகவல் யுகத்தின் ஆதிக்கத்தில் ஆண்டுக்கு ஆண்டு, அது செழித்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இளையோர் முதல் பெரியோர் வரை, ஆக மொத்தத்தில்  அன்பு இதயம் கொண்ட அனைவரும் ஆராதிக்க வேண்டிய -  கொண்டாட வேண்டிய தினமாக  அன்புக்குரியவர் தினம் பரிணமிக்கிறது.

ஏனெனில், இந்த தினம் இன்னாருக்குத்தான் என்று விளிம்புகளைக் கடந்து விட்டது.  எனவே, அன்பு இதயம் கொண்ட அனைவரும் உச்சி முகர வேண்டிய உன்னத தினமாகிவிட்டது. 

இந்நாளில்,  காதலன்- காதலி, தங்களின்  காதலை  வெளிப்படுத்தலாம்-

கணவன்- மனைவி அன்பை ஆராதரிக்கலாம்-

பிரிந்துப் போன இரு இதயங்கள், பிரிவைத் துரத்தி அடிக்கலாம்-

மனம் கசந்து விலகியிருந்த நட்புகள், இன்று மன்னிப்புக் கேட்டு கட்டித் தழுவிக் கொள்ளலாம்-

உறவுகள் அருகிலிருந்தும் இதயங்கள் தூரத்தில் நின்ற உற்றார், உறவினர், உடன் பிறப்புகள், பெற்றோர்கள் என விலகி நின்ற உறவுகளை எல்லாம் மீட்டெடுக்கலாம்-

இதனிலும் மேலாக, ஆதரவற்றோரை மறவாமல், அன்பைப் பகிரலாம். 

அன்பே  வாழ்வின் இனிமைக்கு மூலதனம். இந்நாளில் மலர்கள் பல ரூபங்களில் அன்பை வெளிப்படுத்தி,  தான் மலர்ந்த தருணத்தின் உன்னத நிலையை மனிதர்களின் மனங்களிலும் விதைக்கிறது.

மலர்களில் இருக்கும் மகிமை வேறெதிலும் இல்லை.  ரோஜாமலர் மதிப்பிலும் மாண்பிலும்  உயர்ந்து, அன்புக்குரியவர்களை ஆக்கிரமிக்கிறது.

அன்புக்கான ஏங்குவோருடன், ஆதரவற்று நிற்கும் உள்ளங்களுடன்  மறவாமல் அன்பை பகிர்வோம். உங்களாலான அனைத்து வகையிலும் அன்பின் வெளிப்பாடு மலரட்டும்.  நமது மனங்களைப் போலவே, அன்பே சிவமாய் இந்த உலகம் ஒளிரட்டும்.

வாலென்டைன் டே - வடிவம் கண்டது எப்படி?

பிப்ரவரி 14- இது எப்படி அன்புக்குரியவர் தினமாக அவதரித்தது என்பது குறித்து உலககெங்கும் வெவ்வேறு விதமான கதைகள்  உலவினாலும்-  பெரும்பாலோர்  ஒப்புக்கொண்ட கதை, காதலுக்காக இன்னுயிர் ஈந்த ஒரு பாதிரியாரின் தியாகக் கதைதான்.

ரோமாபுரியை ஆண்ட இரண்டாம் கிளாவ்டியஸ் என்ற மன்னன் திடீரென ஒரு நாள் தன்னுடைய தேசத்தில் ஆண்கள் யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனத் தடையைப் பிரகடனம் செய்தான். ஆண்கள் திருமணம் செய்து கொள்வதால், வீரம் குறைந்து விடுகிறது. எனவே, அவர்கள் வீரத்துடன் போர் புரிவதில்லை என அவன் எண்ணினான்.

காதலர்கள் தண்டிக்கப்பட்டார்கள். திருமணங்கள் கொடுஞ்செயலாக கருதப்பட்டது. ஏன்.., ஏற்கெனவே திருணம் புரிந்தவர்கள் கூட பல வகைகளில் தண்டனைக்கு உள்ளாதவதைத் தவிர்க்க முடியாமல் தவித்தனர்.

அப்போது தான் பாதிரியார் வாலென்டைன், காதலர்களுக்கு இரகசிய தூதுவராக விளங்கினார். பலருக்கு மன்னன் அறியா வகையில் மணம் முடித்து வைத்தார்.  இந்த விஷயம் மன்னனுக்கு கசிந்த போது வாலென்டைன் மரண தண்டனைக்கு உள்ளானர்.  

அந்த நாள், பிப்ரவரி 14- கிபி 270-இல். காதலுக்காக- அன்புக்குரியவர்களுக்காக தன்னுயிரைத் தந்த வாலென்டைன்- ரோமர்கள் ஆட்சி வீழ்ந்த பின்னர் ஒரு புனிதராக போற்றப்பட்டார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS