கணபதி ராவின் சிறப்பு உதவியாளர் சுமன் சுப்பிரமணியம் காலமானார்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.14- சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா அலாம்ஷா தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான கணபதி ராவின் சிறப்பு உதவியாளரான சுமன் சுப்பிரமணியம் நேற்று செவ்வாய்க் கிழமை தமிழகத்தில் காலமானார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு வழிபாட்டுக்காக அவர் தமிழகம் சென்றிருந்த வேளையில் அவர் இயற்கை எய்தியதாக கணபதிராவ் 'வணக்கம் மலேசியா' தொடர்பு கொண்டபோது  தெரிவித்தார்.

மகா சிவராத்திரி தமிழகத்தின் திருவண்னாமலையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். திருவண்ணாமலைக்கு சிவ தரிசனத்திற்காக சுமன் சுப்பிரமணியம் சென்றிருந்தார்.

அப்போது உணவு நச்சுத்தன்மையினால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தம்முடன் திங்களன்று தொடர்பு கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதை சுமன் தெரிவித்தார் என கணபதிராவ்  குறிப்பிட்டார்.

மேலும், உணவு ஒத்துக் கொள்ளாத நிலையில் கடுமையான வயிற்றோட்டம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக சுமன் சுப்பிரமணியம் கூறியதாக கணபதிராவ் கூறினார்.

உடனடியாக தாயகம் திரும்பி விட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார் என்ற போதிலும் மறுநாள் செவ்வாய்க்கிழமை அவர் இறந்து விட்ட  துயரச் செய்தி தம்மை வந்து அடைந்ததாக கணபதிராவ் வேதனையுடன் குறிப்பிட்டார்.

மிகவும் சுறுசுறுப்பானவர் சுமன். எடுத்த பணியானாலும் சரி, கொடுத்த பணியானாலும் சரி, முழு ஈடுபாட்டுடன் செய்து முடிக்கக்கூடிய நல்ல பண்பாளர் என்றும் அவரது திடீர் மறைவு தமக்கு கடும் வேதனையை அளித்திருப்பதாகவும் அவர் சொன்னார். மேலும் அவரது உடலை மலேசியாவுக்குக் கொண்டு வரத் தாம் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகஅவர் கூறினார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS