பணிப்பெண் கொடுமை மரணம்: அண்ணண் - தங்கைக்கு 7 நாள் காவல் நீட்டிப்பு

சமூகம்
Typography

புக்கிட்  மெர்டாஜாம், பிப்.14-இந்தோனிசியாவைச் சேர்ந்த சேர்ந்த 26 வயதுடைய பணிப்பெண்ணுக்கு மரணம் விளைவித்ததாக கூறப்படும் சகோதரர் மற்றும் சகோதரியான இருவருக்கு எதிரான காவல், மேலும் ஒருவார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

போலீஸ் தடுப்புக் காவலுக்குரிய ஆரஞ்சு உடையில் 39 வயதுடைய அண்ணனும் 36 வயதுடைய தங்கையும் இன்று காலை நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.

முதலில் காலை 9.30 மணியளவில் அந்த ஆடவர் போலீஸ் வாகனத்தில் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்தில், அந்த ஆடவனின் சகோதரி போலீஸ் ரோந்துக் காரில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிமன்ற பதிவாளர் நோர் ஹபிபா முன்னிலையில் இவர்கள் இருவரின் காவலை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க போலீசார் அனுமதி பெற்றனர்.

வீட்டுப் பணிப்பெண்ணான அடெலினா என்பவரை கொடுமைக்கு உள்ளாக்கியதாக இந்தச் சகோதர, சகோதரிகளுடன், இவர்களின் தாயாரான 60 வயதுடைய மாதுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் இவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கொலைக் குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பணிப்பெண்ணை மீட்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மறுநாளே அவர் இறந்து போனார். போலீசார் அவரை மீட போது வீட்டுக்கு வெளியே படுத்திருந்தார். 

அவர் கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாக கார் நிறுத்து மிடத்தில் வெறுந்தரையில் தான் படுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக அண்டை வீட்டார்கள் கூறினர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS