வசந்தப் பிரியா மரணம்: கமலநாதன் அப்படிச் செய்தது பொருத்தமற்றது! -டத்தோஶ்ரீ சுப்ரா

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.14-தற்கொலைப் புரிந்து கொண்ட நிபோங் திபால் இடைநிலைப்பள்ளி மாணவியான வசந்தப் பிரியா, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளக்கூடிய பின்னணியைக் கொண்டவர் எனக் கூறப்படுவது தொடர்பான தகவலைக் கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ கமலநாதன் வெளிக்கொணர்ந்தது பொருத்தமற்றது என்று மஇகாவின் தேசிய தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.

இது பற்றிக் கருத்துரைப்பது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல. மாறாக, அது போலீஸ் அல்லது கல்வியமைச்சின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அந்தக் குடும்பத்திற்கும் அந்த மாணவிக்கும் நியாயமான வகையில் நாம் இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த மாணவியின் பெயருக்கோ அல்லது அவர்களின் குடும்பத்தின் பெயருக்கோ பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் எதனையும் செய்யக் கூடாது என்று அவர் சொன்னார்.

வசந்தப் பிரியா ஏற்கெனவே ஒருமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக டத்தோ கமலநாதன் கூறியதாக 'தி சன்' ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.  இது பல்வேறு தரப்புக்களிடமிருந்து அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தி இருந்தது. கமலநாதனின் இந்தக் கருத்து பற்றிய செய்தி குறித்து சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம்  விளக்கினார். 

கமலநாதனிடம்  இது பற்றித் தாம் கேட்ட போது,  “நிருபர் கேட்ட  கேள்விக்கு தாம் சாதாரணமாக பதில் சொல்லியதாக குறிப்பிட்டர் என்று டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் தெரிவித்தார்.

“நான் அவரிடம் (கமலநாதனிடம்) கேள்வி எழுப்பினேன். தாம் அப்படிச் சொல்லவில்லை என்று அவர் சொல்கிறார். அப்படியொரு கருத்தை அந்த நிருபர் தம்மிடம் முன்வைத்த போது அதற்கு மறுமொழி மட்டுமே கூறினேன் என்கிறார் என டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டில் ஒருமுறை   மாணவி வசந்தப் பிரியா தனது மணிக்கட்டை வெட்டிக் கொண்டபோது அவருக்கான மருத்துவ மனநல உதவியை நாடும்படி அவருடைய குடும்பத்தினருக்கு ஆலோசனை கூறப்பட்டதாக தெரிவிக்கும் கவுன்சலரின் அறிக்கையை தி சன் நாளிதழ் மேற்கோள் காட்டியதாகவும் அது பற்றி நிருபர் கமலநாதனிடம் துருவிக் கேட்ட போது “ஆமாம், 2016-இல் அவர் மணிக்கட்டை வெட்டிக் கொண்டார் என்று அவர் பதிலளித்ததாகவும் கூறப்பட்டது.

கவுன்சலரின் ஆலோசனைக்கு ஏற்ப அந்த மாணவியின் குடும்பம் தொடர்ந்து செயல்படவில்லை என்றும் கமலநாதன் பதிலளித்ததாக அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது. எனினும், இதனை வசந்தப் பிரியாவின் தந்தை முனியாண்டி மறுத்திருக்கிறார்.

கடந்த ஜனவரி 24ஆம் தேதி, ஆசிரியையின் கைத் தொலைப்பேசி களவு போனது தொடர்பில் வசந்தப் பிரியாவின் மீது குற்றஞ்சாட்டப்பட்டு சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் மற்றும் அவருடைய கணவரான மற்றொரு ஆசிரியர் ஆகியோர் விசாரித்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் சில நாள் கழித்து சிகிச்சைக்குப் பலனின்றி அவர் இறந்து போன துயரம் மலேசியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS