மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு எதிராக ஜேபிஜே வேட்டை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.15- நாட்டில் பெருநாள் காலங்களில் நடக்கும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக மோட்டார் சைக்கிள்கள் அமைவதால் சட்டத்தை மீறும் மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க போக்குவரத்து இலாகா தீவிரம் காட்டி வருகிறது.

நாளை நாடு முழுவதும் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கின்ற நிலையில், அனைத்து விழா காலங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜேபிஜேவின் துணை நடவடிக்கை இயக்குனர் டத்தோ வான் அமாட் ஹுசீர் கூறினார்.

"நாட்டில் நடக்கும் கடுமையான வாகன விபத்துகளில் 60 விழுக்காட்டினர் மோட்டார் சைக்கிளோட்டிகளும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் தான் பலியாகின்றனர். அதனால் தான் நாங்கள் அவர்கள் மீது தங்கள் பார்வையைச் செலுத்தியுள்ளோம்" என அவர் கூறினார்.

நேற்று இரவு 8 மணிக்குத் தொடங்கிய சோதனை நடவடிக்கையில் 1,065 மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் 355 குற்றங்களுக்காக 197 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் டத்தோ வான் அமாட் கூறினார்.

அதில் சாலை வரி இல்லாததால் 179 குற்றங்களுக்கும் வாகன உரிமம் இல்லாததால் 139 குற்றங்களுக்கும் ஓரக் கண்ணாடி இல்லாமல் மோட்டார் ஓட்டிய மூவருக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும் போதைப்பொருள் உட்கொண்டதாக நம்பப்படும் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரைத் தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் கைது செய்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS