நீர் வீழ்ச்சியில் துயரம்: இளம் நடிகர் நகுலன் உள்பட மூவர் மூழ்கி மரணம்!

சமூகம்
Typography

கோலக் குபுபாரு பிப் 16- உலுயாம்பாரு சுங்கை சென்டுட் நீர் வீழ்ச்சிக்கு நண்பர்கள் குழுவுடன் குளிக்கச் சென்றிருந்த இளம் நடிகர் பா.நகுலன் (வயது 20) அவரது மூத்த சகோதரர் பா. பேச்சீஸ்வரன் (வயது25) மற்றும் அவர்களின் நண்பரான கணேசன் (வயது 23) ஆகியோர் நீரில் மூழ்கி இறந்தனர். இந்தச் துயரச் சம்பவம் இன்று காலையில்  நடந்தது.

நண்பர்களுடன் நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த தங்களது குழுவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், நீர் வீழ்ச்சியில் தத்தளிப்பதைக் கண்ட நகுலன் அவரைக் காப்பாற்ற நீரில் பாய்ந்தார்.  அந்தத் தோழியை அவர் காப்பாற்றி விட்டார் என்றாலும் அவர் நீர்ச்சுழற்சியில் சிக்கினார்.

இதனைக் கண்டு அதிர்ந்து போன நகுலனின் அண்ணன் பேச்சீஸ்வரனும் நண்பரான கிள்ளானைச் சேர்ந்த கணேசனும் நகுலனை மீட்க நீரில் குதித்தனர். பின்னர் துரதிஷ்டவசமாக அவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சைபர் ஜெயாவிலுள்ள நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த நகுலன், அலோர்ஸ்டாரைச் சேர்ந்தவர் ஆவார். நகுலனுடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள் மற்றும் நான்கு சகோதரர்கள் என்று அவருடைய மாமாவான அறிவழகன் (வயது 35) தெரிவித்தார். 

சிறந்த நடிகராகத் திகழ வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நகுலன், ஆஸ்ட்ரோவும் "வணக்கம் மலேசியா"வும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான ஓரங்க நாடகப் போட்டிகளில் கலந்து கொண்டு நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,  வணக்கம் மலேசியா ஏற்பாட்டில் நடிகர் நாசர் நடத்திய நடிப்புப் பயிற்சிப் பட்டறை ஒன்றிலும் கலந்து கொண்ட நகுலனின் திறமையைக் கண்டு நடிகர் நாசர் அவரைப் பாராட்டி ஊக்குவித்தார்.

மேலும் அண்மையில் படப்பிடிப்பு நடந்து முடிந்த தொலைக்காட்சி படம் ஒன்றில் நகுலன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். நீர் வீழ்ச்சியிவிருந்து மீட்கப்பட்ட இவர்களின் உடல்கள் கோலகுபுபாரு மருத்துமனைக்குக் கொண்டு வரப்பட்டு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சொந்த ஊரான அலோர்ஸ்டாருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS