தஞ்சோங் மாலிமில் டாடா வாகனத் தயாரிப்பு தொழிற்சாலை! -அமைச்சர்

சமூகம்
Typography

ஈப்போ, பிப்.17- இந்தியாவின் மிகப்பெரிய அனைத்துலக வாகனத் தயாரிப்புத் தொழில் குழுமான டாடா நிறுவனத்தின் தொழில்கூடம் தஞ்சோங் மாலிமில் அமைவதற்கான ஏற்பாடுகளில் மலேசியா தீவிரம் காட்டியுள்ளது என்று இரண்டாவது வர்த்தக,தொழில் துறை அமைச்சரான டத்தோஶ்ரீ ஓங் கா சுவான் தெரிவித்தார்.

இங்கிலாந்தின் கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜக்குவார் மற்றும் லேண்ட் ரோவர் போன்றவற்றுடன் கொள்முதல் செய்து வரும் டாடா குழுமம், தஞ்சோங் மாலிம் பகுதியில் தங்களின் வாகனத் தயாரிப்புத் தொழிலை அமைக்கவிருக்கிறது என்றார் அவர்.

சீனாவுடன்  சேர்ந்து புரோட்டன் மற்றும் கீலி நிறுவங்களுக்கு இடையிலான கூட்டுத்தொழில் திட்டம் உருவாகி இருக்கும் நிலையில் அடுத்து இந்தியாவுடன் வாகனத் தயாரிப்பு தொழிலில் இறங்க மலேசியா இலக்குக் கொண்டுள்ளது என்றார் அவர்.

இந்த சீனப்புத்தாண்டு முடிந்தவுடன் இது தொடர்பாக இந்தியாவின் தொழில்துறை அமைச்சருடன் தொடர்பு கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் இது குறித்து ஏற்கெனவே பிரதமர் நஜிப்புடனும் பேரா மந்திரி புசாருடனும் பேசப்பட்டு அவர்களும் முழு ஆதரவை அளித்திருப்பதாகவும் ஓங் கா சுவான் சொன்னார்.

தஞ்சோங் மாலிமில் வாகனத் தயாரிப்புக்கான மையம் ஒன்றை அமைக்க டாடா குழுமம் முடிவு செய்தால், அது மலேசிய சந்தையை மட்டுமின்றி  ஆசியான் நாடுகளுக்கான ஏற்றுமதியையும் நோக்கமாக கொண்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அப்படியொரு சூழல் உருவாகும் போது டாடா குழுமத்திற்கான சில சலுகைகளையும் நாம் அளிக்க வேண்டியது  அவசியமாகிறது.  இவை சாத்தியமானால், புரோட்டன் சிட்டிக்கு அருகில் டாடா தொழிற்சாலை அமையக் கூடும் என்றார் அவர்.

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS