பாட்டி வீட்டு வந்த இரு பேரப்பிள்ளைகள் தண்ணீர் தொட்டியில் மூழ்கி ஒருவர் பலி!

சமூகம்
Typography

 ஈப்போ, பிப்.17- சீனப் புத்தாண்டு விடுமுறையைக் கழிக்க பாட்டி வீட்டுக்கு வந்திருந்த பேரப் பிள்ளைகள், குளியலறை தொட்டி தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக மூழ்கியத்தில்  ஒருவர் இறந்தது. மற்றொரு குழந்தை மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

இங்கு ஜெலப்பாங் என்ற இடத்திலுள்ள தாமானில் இந்தத் துயரச் சம்பவம்  நடந்தது.

நான்கு வயது மற்றும் இரண்டு வயதுப் பேரப் பிள்ளைகளான அவர்கள், இருவரும் காலையில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் இவர்களின் இதர இரண்டு மூத்த உடன்பிறப்புக்களும் தூங்க்கி கொண்டிருந்தனர். 

அதே வேளையில் இவர்களின் பாட்டி காலை உணவைத் தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பேரப் பிள்ளைகளிடமிருந்தும எந்த சத்தமும் வராமல் போகவே பாட்டி அவர்களுக்காக குரல் கொடுத்துப் பார்த்தார்.

 அதற்கும் பதில் இல்லாத நிலையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றுப் பார்த்த போது பாட்டி அதிர்ந்து போனார்.

பக்கத்தில் இருந்த குளியலறைத் தொட்டியில் இருந்த தண்ணீரில் அந்த இரு சிறுவர்களும் மூழ்கிக் கிடந்தனர். 

பின்னர் அந்தச் சிறுவர்களைச் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர் என்றாலும் சிறிது நேரத்தில் நான்கு வயது சிறுவன் உயிர் நீத்தான். அதேவேளையில் இரண்டு வயதுச் சிறுவனுக்குஅபாயகரமான நிலையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீனப் பெருநாள் விடுமுறை காரணமாக, கோலாலம்பூர் செராசில் இருந்து பாட்டி வீட்டிற்கு தங்களின் பெற்றோர்களுடன் இந்தச் சிறுவர்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS