ஆசையோடு காண வந்த திருக்கை மீன்கள் கண்முன்னே வெட்டப்படுவதா? -சுற்றுப் பயணிகள்

சமூகம்
Typography

கோத்தா கினாபாலு, பிப்.19- சபாவின் புலாவ் மாபுல் பகுதி, முக்குளிப்போருக்கு சொர்க்க பூமியாக திகழ்கிறது என்றாலும் அப்பகுதிக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்கு குறிப்பாக சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சியைத் தரும் சம்பவங்கள் நடந்தன.

இப்பகுதியின் கடலடியில் உலாவும் 'மண்டா ரே' வகைத் திருக்கை மீன்கள், மற்றும் குட்டி சுறா மீன்கள் ஆகியவற்றை கண்டு களிக்க முக்குளிப்பில் ஆர்வம் மிக்க சுற்றுப் பயணிகள் இங்கு கணிசமாக வருவதுண்டு.

கடலில் தாங்கள் காண வந்த அந்த வித்தியாசமான கடல் உயிரினங்கள், புலாவ் மாபுல் கடலோரப் பகுதியிலுள்ள  கிராம மக்களால் வெட்டிக் கொல்லப்படும் காட்சியை சுற்றுப்பயணிகள் காண நேர்ந்த போது அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.

இந்தக் காட்சியைக் கண்ட சீன நாட்டு மற்றும் மேற்கத்திய நாட்டுச் சுற்றுப்பயணிகள் எதற்காக இப்படிக்கொல்கிறார்கள்? என்று சுற்றுலா வழிகாட்டிகளை கேள்வி மேல் கேள்வி கேட்டு நச்சரித்து விட்டனர்.

சிப்பாடான் என்ற இடத்தில் கடல் வாழ் திருக்கை மீன்களையும் சுறா மீன்களையும் கண்டு கழிப்பதற்காக வந்த அவர்கள், அதே உயிரினங்கள் மனிதர்களால் தங்களின் கண் முன் கொல்லப்படுவதைக் காண நேர்ந்தால், அந்த வேதனைக்கு அளவு ஏது? என்கிறார் சபாவின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஆர்வலரும் சபா சுறா மீன்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவருமான அட்டெரிக் சோங்.

இத்தகைய மண்டா ரே வகைத் திருக்கை மீன்கள், கூட்டரசு மீன்வளச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக  கடந்த ஆண்டிலேயே அரசு கெஜட்டில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 

அதேபோன்று சுத்தியல் தலை சுறா மின்கள் என்றழைக்கப்படும் இனங்களும் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அவை இன்னமும் கெஜட் செய்யப்படாமலேயே இருக்கிறது என்று அவர் சொன்னார்.

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS